Womanகாலமுள் கிழித்த
காயத்திலிருந்து வடிகிற
குருதியை வழித்து
கோபத்துடன்
மேகங்களில் வீசியெறிகிறது
செவ்வந்திச் சூரியன்.
சாலையோரத்து உதிர்சருகு
தன்னை மிதித்த கால்களை
முறிப்பதாய்ப் பேசியபடியே
முறிகிறது துகள்களாய்.
'தெரியாதே மிதித்தேன்'
எனச் சத்தியமிட முடியாத ஒரு
நேர இடைவெளிக்குள்
என்னை
கொட்டி விட்டுச் சுருள்கிறது
சிறு எறும்பு.
இவ்வாறாக இவைகள்
வாழ்ந்துவருகிற உலகில்
வாழ்ந்து வருகின்ற நான்
சகோதரனுக்கோ
துணைவருக்கோ
கொடுப்பினையில்லாதபடிக்கு
வீதிக்கிறங்கிய பொழுதொன்றில்
என்னுடலில் இச்சையுற்ற
ஒற்றை வார்த்தையை
உமிழ்ந்தாய் என்மீது
காறித் துப்பிய உமிழ்நீராய்.
அந்த எச்சில்
பிறகாதுகள் ஏதாவதொன்றில்
விழுந்திருக்குமோவென
அலைகிற என் கண்களை
மேலும் தாழ்த்தி நடந்தேன்
உடல் நடுங்கிப் பதற.
என் அதிஷ்ட வேளை.
எவரும் கேட்டிருக்கவில்லை.
எவரும் கேலிக்கவில்லை.
எனினும்.....
இரவானது அமைதியுற்றதன் பிறகு
என் கனவில் வந்து
என்னைப் பார்த்துச் சிரித்தன
செவ்வந்திச் சூரியனும்
ஒரு சருகும்
சின்னதோர் எறும்பும்.
தாங்க முடியவில்லை.

சாரங்கா தயாநந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It