கடமையென்ற உணர்வுகொண்டு கடல்கடந்த தமிழன்
காலமென்ற சுவடிமீது சுவடுதந்த தமிழன்
உடைமையென்றும் உறவுஎன்றும் உரிமைகொண்ட தமிழன்
உழைப்புகொண்டு உயர்வுகண்ட ஒப்பிலாத தமிழன்!

திரைகடந்து திரவியங்கள் ஈட்டவந்த தமிழன்
தியாகவாழ்வு என்னவென்று காட்டவந்த தமிழன்
புரைபடர்ந்த வறுமைதன்னைப் போக்கவந்த தமிழன்
புனிதமிக்க புகழ்பொறிக்கும் புலம்பெயர்ந்த தமிழன்!

என்னஎன்ன துன்பம்வந்து தன்னைச்சுட்ட போதும்
இட்டவேலை எத்தனைதான் இடர்கள்தந்த போதும்
அன்னைபூமி விட்டுவந்து வியர்வைசிந்தும் தமிழன்
அடக்கிவைத்த வேதனைக்கும் அமைதிசொல்லும் தமிழன்!

பாலைமண்ணின் பாதையெங்கும் செப்பனிட்ட கொத்தன்
பருவமாற்றம் தாங்கித்தாங்கிப் பழகிப்போன சித்தன்
காலைதொட்டு மாலைமட்டும் கடமையிலே பித்தன்
கவலையேதும் காட்டிடாது தவமியற்றும் புத்தன்!

ஒட்டகத்தின் பாழ்நிலத்தில் மேய்ச்சல்நிலம் கண்டான்
உழைப்புதந்து அரபியர்க்கு உயர்வுநிலை தந்தான்
விட்டகன்ற சொந்தபந்தப் பிரிவுதாங்கு கின்றான்
வெந்துவெந்து பாலைமண்ணைச் சோலையாக்கு கின்றான்!

அலுவலகம் பொழுதனைத்தும் அல்லலகம் ஆகும்
ஆயிடினும் அருந்தமிழன் பணிப்பயணம் போகும்!
நிலுவையிலே ஊதியங்கள் நின்றுபட்ட போதும்,
நிற்பதில்லை தமிழனாற்றும் பணிதான்,ஒரு போதும்!

வளைகுடாவின் திசைகளெங்கும் தமிழன்இருக் கின்றான்
வசைபொழிவார் க(ண்)ணும்உழைப்பை வாரிவழங்கு கின்றான்
தளைகெடாத கவிகள்போலத் தழைத்துஓங்கு கின்றான்
தமிழ்ப்பகைஞர் சதிகளுக்கும் பதில்விளம்பு கின்றான்!

அந்நியனோ? அல்லன்,இந்தப் புலம்பெயர்ந்த தமிழன்!
அந்நியச்செல வாணிதன்னை வாழவைக்கும் தமிழன்!
தன்னுழைப்பைத் தன்னிலத்தே குடியமர்த்தும் தோழன்
சரித்திரத்தில் மீண்டும்இவன் ராஜராஜ சோழன்!

புலம்பெயர்ந்த தமிழன்இன்று புவனம்அளக் கின்றான்
புதிர்மிகுந்த வாழ்வில்கூடப் புதினம்சமைக் கின்றான்
நிலம்இழந்த நிலையில்கூட நிமிர்ந்துநடக் கின்றான்
நெஞ்சமெங்கும் நீதிவேட்கை நிறைந்துகிடக் கின்றான்

ஈச்சமரக் காட்டிடையே இரையும்வண்டி னங்காள்!
எண்ணெய்வளம் பாடுகின்ற பாலைஎந்தி ரங்காள்!
பூச்சொரியும் பொழில்உலாவும் அரியபுள்ளி னங்காள்!
புலம்பெயர்ந்த தமிழனுக்கோர் “போற்றி!”பாடு வீர்காள்!...

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It