மதியவுண(வு) அருந்த,தமாம் நகரில் ஓர்நாள்
மலையாளி ‘ரஸ்டோரண்ட்’ சென்றி ருந்தேன்.
‘எதுகிடைக்கும்?’ எனவினவ, கடையில் நின்றான்
‘இந்(நு)இவிடே அடிபொளிமீன் அயிலை!’ என்றான்.
‘விதியிது:வே(று) என்செய!’என்(று) எண்ணி நானும்
‘விளம்பிடுக!’ எனவேண்டி உண்ண லுற்றேன்.
‘புதிதாணோ நிங்ஙளு,இச் சௌதிக்(கு)?’ என்று
புதிராக என்னையவன் பார்த்துக் கேட்டான்.

‘இ(ல்)லையப்பா! இங்குவந்து இருப தாண்டு
எனக்காச்(சு)!’என் றேன்:அவனோ ‘அதுவா ணெங்ஙில்
மலையாளம் அறியாத்த(து) எந்தா?’ என்று
மலிவான கேலியுடன் நகைத்துக் கேட்டான்.
குலையாத அமைதியொடு நானும் சொன்னேன்:
‘குற்றமொன்றும் இல்லையப்பா அதனால்! யானோ
கலையாழம் மிக்கதமிழ் நாஞ்சில் நாட்டுக்
கரையாளன்: தமிழ்பேசத் தயங்கேன்’ என்றேன்.

‘பறஞ்ஞநிங்ஙள் நாஞ்சிலெந்ந நாகர் கோவில்
பண்டுஞங்ஙள் கேரளமாய் இருந்ந தல்லே?
குறஞ்ஞ(து)ஒரு வாக்குபோலும் சம்சா ரிச்சு
கூடே?’என்(று) அவன்மேலும் கொக்க ரித்தான்.
‘திறமறியா நண்பா!நீ தெரிந்து கொள்வாய்:
கேரளமே மிகப்பழைய தமிழ்நா(டு)! உன்றன்
உறவினர்கள் முற்காலம் பேசி வந்த
உயர்தனிச்செம் மொழி,எங்கள் தமிழே!’ என்றேன்.

குரலுயர்த்திக் கேலியுடன் அவனும்; கேட்டான்:
‘கோழியாணோ மொட்டையாணோ ஏதா(ணு) ஆத்யம்?’
நிரல்படுத்தி நானவற்கு விளக்கம் சொன்னேன்:
‘நீடுபுகழ் ‘சேரவள நாடு’என் னும்சொல்
மருவியதால் ‘கேரளநா(டு)’ ஆன தப்பா:
‘மலைவேழம்’ ‘மலையாளம்’ ஆன தப்பா:
அரபியர்தம் நாட்டினில்வந்(து) அகந்தை நோயால்
அறியாமைக் கூத்தடிக்க வேண்டாம்!’ என்றேன்.

வண்டமிழின் தொன்மைதனை அறியான் அந்த
வறியானும் வாய்திறந்து உளற லுற்றான்:
‘கண்டோ!ஈ தமிழன்மார் (பி)ராந்து கண்டோ!
காணுந்ந ஸ்தலமொக்கே ப்ரஸ்ன மாக்கி.
தெண்டானாய்ச் செந்நஇவர் சிறிலங் காவில்
தீவிரவா திகளாயி: தோக்கு தூக்கி.
பண்டிருந்தே ஜீவிச்ச சிங்க ளன்மார்
பணிதிரக்கி வந்நவர்க்குச் சமமோ?’ என்றான்.

‘வளைகுடாவில் பணிதிரக்கி வந்த உன்போல்
வங்கம்நின்று வந்தவன்தான் சிங்க ளத்தான்:
அலைகடந்து நாடுகளை ஆண்டி ருந்த
அக்காலத் தமிழன்தான் இலங்கை மண்ணை
நிலையாக ஆண்டிருந்தான். நேற்று வந்த
நீயொன்றும் இஃதறிய நியாயம் இல்லை:
மலையாளி ஒருவன்தான் இதுபோல் பேசும்
மடமைதனைச் செய்கின்றான்!’ என்று சொன்னேன்.

‘சிலம்(பு)ஈந்த இளங்கோவும் உதியன் வம்சச்
சேரலிரும் பொறையினமும், இமயம் வென்ற
குலம்புகழ்வான் குட்டுவனும் சேர நாட்டில்
கோலோச்சி நின்றிருந்த காலத் தில்தான்
இலங்கைதனைக் கயவாகு தமிழன் ஆண்டான்.
இவன்வந்தான் கண்ணகியின் சிலை விழாவில்.
நலங்கெட்ட மலைநாடா! அறிவாயா, நீ
நற்றமிழர்ப் பெருவரலா(று)?’ என்று கேட்டேன்.

‘இத்ரேயும் சரித்திரம்ஞான் அறிஞ்ஞில் லல்லோ!
என்டெபொன்னு சேட்டா!நீ மிடுக்க னாணு!
சத்தியம்ஞான் சம்மதிச்சு: மேலால் நின்னைச்
சல்லியங்ஙள் செய்யில்லா!’ என்று சொன்னான்.
‘புத்திகொண்டு பொருள்ஆராய்ந்(து) இனிமேல் பேசு:
புண்படுத்திப் பேசுவதை நிறுத்து!’ என்றேன்.
வற்றியதோர் குளமாம்தன் மடமை யெண்ணி
வாயடைத்து நின்றான்,அம் மலையா ளத்தான்!...


தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It