என் பாதையெல்லாம் முட்களாய் இருந்தபோது என்னோடு பயணித்தவளே...

இன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்
கோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....

நம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று
தூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...

முட்டை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..

புல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்
ஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்
வலியுடன் நடமாடுகிறேன்.

கண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன
மழைத்துளிகள்..

கண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்
நினைவுத்துளிகள்..

காதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை
காலத்தால் கரைக்கமுடிவதில்லை.

சிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்
உலர்ந்துவிடுவதில்லை.

புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்
மினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை
சுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.

சுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை
நினைவூட்டுகிறது தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.

தோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக
மாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல் தவித்திருக்கிறேன்..

ஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு மறைகின்றன உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.

பின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும் வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..

பந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்
பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன் சிரிக்க பழகிவிட்டேன்.

எனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.

காலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.
காதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.

ஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.

நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It