இதுநாள் வரை
நிறைய
கவிதைகள் எழுதியிருக்கிறேன்

இன்றுதான்
முதன் முதலாய்
கவிதைகளைப் பற்றி எழுதுகிறேன்

இறைவன்
பூமிக்கு வரமுடியாத காரணத்தால்
இங்கே தாய்மார்கள்
பிள்ளை பெறுகிறார்கள்

குழந்தைகள் பிரசவிக்கும்
முதல் இசையை
சுரம் பிரிக்கவே முடிவதில்லை
எந்த இசைக்கருவியாலும்

குழந்தைகள்
பிறக்கும் பொழுது
அழுவதன் காரணம்
பூமிக்கு வருவதன் மீதான
பயமாய்க் கூட இருக்கலாம்

குழந்தைகள்
தொப்புள் கொடியில்
பூக்கும் மலர்கள்

குழந்தைகளின்
முதல் அழுகையின் பொழுதுமட்டும்தான்
எல்லோராலும்
வெளிப்படையாகச் சிரிக்க முடிகிறது

குழந்தைகள்
கைகளை மூடிக் கொள்வதன்
காரணம் தெரியுமா?
திறந்து பாருங்கள்
நமக்கு தெரியாத ரகசியங்களை
அவர்கள் ஒளித்து வைத்திருக்கிறார்கள்

குழந்தைகள்
ஞ ங ண ந ம ன மட்டும் தெரிந்த
மெல்லினங்கள்

குழந்தைகளை
தயவு செய்து திட்டாதீர்கள்
பாவம்!
அவர்கள் கண்ணாடிகள்
பிறிதொரு நாள்
அப்படியே பிரதிபலிப்பார்கள்

குழந்தைகள் காகிதங்கள்
கவிதை எழுதுங்கள்
ஓவியம் வரையுங்கள்
கிறுக்கவும் கிழிக்கவும் மட்டும் செய்யாதீர்கள்

குழந்தைகள்
கேள்வி கேட்டால்
குழந்தைகளைப் போல பதில் சொல்லுங்கள்
உங்கள் மௌனத்தை
அவர்கள் எப்பொழுதுமே விரும்புவதில்லை

குழந்தைகளுக்காக
கதை படியுங்கள்
நாம் திருந்த வாய்ப்பிருக்கிறது

குழந்தைகளிடம்
கற்றுக் கொள்ளுங்கள்
பிரம்புகளில்லாத
ஆசிரியர்கள் அவர்கள் மட்டும்தான்

ஒரு உண்மை சொல்லட்டுமா!
ஒவ்வொரு குழந்தையும்
வளரத் தொடங்கிறபொழுது
இங்கே
ஒரு இறைவன்
இறந்து போகிறான் 

பாலகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It