(கட்டளைக் கலித்துறை)

தொப்பூழ் நடனம் தொடைகள் தரிசனம் தொட்டுபல
தப்பு வரிசைகள் தந்தே இளைஞர் தலைமுறையை
மப்புப் பிடித்த மடையர் குலமென மாற்றிடுமோர்
அற்பத் திரைத்துறை ஆடிடும் ஆட்டம் அளவிலையே!..

காட்சி தனில்வரும் கந்தைகள் தம்மைக் கருத்தினிலும்
ஆட்சி புரிய அனுமதி நல்கும் அறிவிலர்பால்
தேர்ச்சி மிகுந்திடும் தீமையைக் கொண்டு திணித்துவிடும்
சூழ்ச்சியில் இந்தத் துறையினை என்னென்று சொல்லுவதே!...

வக்கிரம் நாறும் வசன நடைகளின் வாணிகத்தைத்
தக்க தருணம் தழுவி நடாத்தும் தறுதலைகள்,
வெட்கம் களைந்து விதைத்திடும் கண்ணி வெடிகளிலே
சிக்கித் தவிப்பது செந்தமிழ் மாந்தர்தம் சிந்தனையே!..

‘பச்சை’ வசனமும் பாட்டும் எழுதிப் பணம்குவித்தும்
இச்சை தணிந்திடா ஈனத் திரைத்துறை, இப்பொழுதோ
கச்சை தொறுமொரு கத்தி சுமக்கும் கதைவடித்துப்
பிச்சைக் கலத்திற் பெருந்தொகை சேர்த்துப் பிழைத்திடுதே!..

கூச்சம் தொலைந்த கொலைவெறி தாங்கிய கொள்கையுடன்
காட்சி யமைத்தல் கடமையென் றெண்ணும் கலையுலகம்,
வீச்சரி வாள்முன்னும் வேல்கம்பின் முன்னும் விழுந்துகொண்டு
நேர்ச்சை செலுத்துதல் நித்தமும் காணும் நிகழ்ச்சிகளே...

குத்திப் பிளத்தலும் கொல்தலும் தான்,கதைக் கூறுகளா?
(இ)ரத்தச் சகதிதான் இன்றைய மண்ணின் இலக்கணமா?
கத்தி முனையில் கதறல்கள்தான் எங்கும் காணுவதா?
எத்தனைக் காலம் இருட்டறைக்குள் இந்த இன்னல்களே?..

நெஞ்சை நெகிழ்த்திய நேற்றைய நீண்ட திரைச்சுருளில்
கொஞ்சமேனும் கோடம் பாக்கம் இன்றைக்குக் கொடுப்பதில்லை..
அஞ்சுவ தஞ்சல் அறிந்த தமிழர் அனைவருக்கும்
வஞ்சக வன்முறை ஒன்றையே வாரி வழங்கிடுதே..

காசு கொடுத்துக் கவலை மறந்திட வந்தவரைத்
தேசம் வெறுத்திடும் தீவிர வாதிகள் ஆக்குவதேன்?..
பாச மனத்தொடு பாமரன் காணும் படங்களெல்லாம்
நீசக் கொலையெனில், நெஞ்சினில் என்ன நிலைப்பதுவே?..

அறிவு தழுவிய ஆன்ற படைப்புகள் ஆயிரமாய்ச்
செறிவுறத் தந்தநம் செந்தமிழ் வம்சம், திரையுலகால்
நெறிபிறழ் கின்ற நிகழ்வுதனைக் கண்டு நெஞ்சினிலே
பொறிபறக் கின்ற சினத்தொடு பொங்குக, பொங்குகவே!..

போதும், நிறுத்துக! புன்மதி வன்முறை போயொழிக!
ஏதும் அறிகிலர் என்றே நினைத்தெம் தமிழ்க்குலத்தின்
மீது படர்ந்து மிரட்டும் திரைத்துறை ‘மேதை’கட்காய்
வாதம் புரிபவர் தம்மை வளைக்கட்டும், வன்முறையே!..


தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It