குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
உறைந்தபனிக்குள் பத்திரப்படுத்த
மாயன்காலத்தவர்கள் போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன

காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்து போனவர்களின் நினைப்பொழிந்து
போர்துரத்தும் பயங்களைக் கலைக்கலாமென
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகிறான்
தோழன்.

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்குறிப்புக்கள் கலைத்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.


டிசே தமிழன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.