அமைதியான இயற்கைச் சூழலில் ஆயர்பாடிகள் முல்லை வெண்பூக்கள் சிதறிக் கிடக்கும் நிழல் பூமி; மிதந்து வரும் குழலொலிக்கு மயங்கும் மேய்ச்சல் கணங்கள்; கோட்டு மண் கொள்ளும் எருதுகள்; பச்சிளங் கன்றுகளின் அழைப்பு; ‘இதோ வருவர் தாயர்' என ஆற்றுவிக்கும் சிறுமிகள்; வீடு திரும்பும் தாய்ப்பசுக்களின் அவசரநடை; அவற்றின் பின்னே வரும் ஆயர்களின் கோல் ; மோர் விற்று நாகு வாங்கும் இடைப் பெண்கள் ; ஏறுதழுவும் வீரம் என எழிலார்ந்த ஒரு சித்திரம் சங்க இலக்கியத்திலிருந்து தோன்றுகிறது.

“கொல்லேறு எதிர்ப்படுவது தீச்சகுனம்'' என்றாலும் ஏறுகளின் ஏழு வகைகளைப் பாட்டாகக் சொல்வதில் தனி இன்பம் கண்ட இளங்கோ, “கோவலர் வாழ்க்கையிலோர் கொடும்பாடு இல்'' என்றார். கண்ணனே நிறைந்திருந்த திருப்பாவை நாச்சியான் நெஞ்சில் “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்கும் மென்பனி மேய்ச்சலுக்குக் கிளம்பும் எருமைகளுக்கும் தனித்தவொரு இடமிருந்திருக்கிறது.

எமது முற்கால, பிற்கால இலக்கியங்கள் இடையர் வாழ்க்கையின் அழகை கொண்டாடினவே தவிர வலியை உணர்த்துவதாக இல்லை. இடையர்களின் வாழ்க்கை இடர் நிரம்பியதென்றாலும் அவர்களது அனுபவம் எப்போதுமே அறிந்து கொள்வதற்கு ஆவலூட்டுவதாக உள்ளது.

கால்நடை வளர்ப்பு உயிர்களோடு தொடர்புடைய தென்பதாலேயே இதர தொழில்களைத் காட்டிலும் மனதுக்கு இதம் தருவது பசுக்கள், எருதுகள், ஆடுகள். இவை அனைத்துமே கிராம வாழ்க்கையோடு ஒன்றியவையாக உள்ளன. இவற்றின் அண்மையும் இவற்றைப் பராமப்பதும் இவற்றுடன் உரையாடுவதும் மனிதர்களுடனான உறவைவிட அதிக மகிழ்ச்சி தருவதாயிருக்கிறது. தன்னை அடித்தால் அல்லது அவமதித்தால் கூடப் பொறுத்துக் கொள்ளும் மனிதன், தான் வளர்க்கும் பிராணிக்கு இடையூறு விளைவிப்பதை எப்போதுமே மன்னிப்பதில்லை. கோழிகளாலும் ஆடுகளாலும் ஏற்படும் பகை பெரும்பகைகளாக உருவெடுத்து கொலையில் முடிந்திருக்கிற சம்பவங்கள் கூட உண்டு.

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்நாளில் பெரும்பகுதி மனிதர்களை விட ஆடுகளுடனேயே கழிந்து விடுகிறது. ஆடுகளுக்கு மேய்ச்சல் தேடி ஊர் ஊராக அலையும் வாழ்க்கை அனுபவங்களும் இடையர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் கிராமத்துடனான உறவுநிலைகளும் சாதராண வாழ்க்கையின் செக்கு மாட்டுச் சூழலில் இலக்கிய நெஞ்சுக்கு ஈர்ப்புடையதாக இருப்பதில் வியப்பில்லை.

மராட்டிய நாவலான ‘பன்கர்வாடி’ நினைவிலிருந்து அழியாததற்கான காரணம் அது இடையர் கிராமமொன்றின் வாழ்க்கையைச் சுவாரசியமாய்ச் சொல்லிச் செல்வதுதான். தமிழ் இலக்கிய வாதிகள் இடையர் வாழ்க்கையை அனேகமாக அவதானித்துக் கொள்ளவில்லையென்றே குறிப்பிடலாம்.

கி.ராஜநாராயணனின் ‘கிடை’ ஆடுமேய்க்கும் கிழவன் மரபு சார்ந்த இயற்கை அறிவினை நினைவூட்டுகிறது. பருவகால மாற்றத்தை நன்குணர்ந்த அந்த முதியவர் வரப்போகும் பஞ்சத்திலிருந்து காத்துக் கொள்ள ஆடுகளை ஆவாரம் பூச்செடிகளையே மேயவிடுவதும் கடல்நீரைக் குடிக்கப் பழக்கப்படுத்துவதும் கம்மம் புல் தானியங்களை மண்ணோடு குழைத்துத் குட்டிச் சுவராக எழுப்பி ஆடுகள் குட்டிச் சுவற்றில் உராயும் போது உதிரும் தானியங்களே உணவாகுமாறு சேமிப்பதுமான அவரது செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கதாக இருக்கின்றன. இடையர் வாழ்க்கையை ஊன்றிக் கவனித்து நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரளவு பதிவு செய்துள்ளவராக ராஜநாராயணன் மட்டுமே தெகிறார். இந்தச் சூழலில் தமிழ்ச் செல்வியின் ‘கீதாரி’ மிகுந்த கவனத்தைப் பெற வேண்டிய நாவலாக அமைகிறது.

சமீபகால யதார்த்த நாவல்களில் ‘கீதாரி’ உயிரோட்டமுடன் இடையர் வாழ்க்கையிலிருந்து மனிதப்பண்புகளின் உச்சத்தைத் தொட்டுக் காண்பிக்கும் சிறந்த நாவலாக உருப்பெற்றுள்ளது. இலக்கிய வாசிப்பின் மூலம் தனது மனித நேயப்பண்பினை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டதாகக் குறிப்பிடும் நாவலாசியர் படைத்துள்ள ‘ராமு கீதாரி’ மிகுந்த கவனம் பெறும் பாத்திரமாகிறது.

சக உயிர்களை நேசிப்பதும் வலியை உணர்ந்து வேதனைப்படுவதும் நம்மில் பலருக்கும் இயல்பானதுதான். எவ்விதமான பயன்நோக்கும் சுயநலமுமின்றி பிற உயிர்களின் இன்னல் தீர்க்கத் தன்னுயிரையும் இழக்கக்கூடிய ஒரு அபாயமான செயலில் ஈடுபடுவதென்றால் அது சாமானியமான காரியமல்ல. அத்தகையதொரு கதை மாந்தரை வெகு சிலரே இலக்கியத்தில் படைத்துள்ளனர்.

நகராட்சிகளுக்காக நாய்களைக் கொன்றும், காட்டு உயிர்களைப் பிடித்து விற்றும் வாழ்க்கை நடத்தும் பழங்குடி மனிதன் ஒருவன் வழி நடைப்பயணத்தில் அறிமுகமாகிற கர்ப்பிணிப் பெண்ணைத் தன் முதுகில் சுமந்து கரடுமுரடான மலைப் பாதையையும் காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதும் அவளுக்கு சுகப்பிரசவமான செய்தி தெரிந்த பின்பே தன் பயணத்தைத் தொடர்வதுமான சிறுகதை நாம் என்ன செய்கிறோமென்ற குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. அதைப் போலவே தகப்பன் பட்ட கடனுக்காக இரு குழந்தைகளையும் கொத்தடிமைகளாக்கி தனது பண்ணை வேலைக்குப் பயன்படுத்தும் வஞ்சகச் சேர்வையிடமிருந்து காப்பாற்றி இரவில் தோளில் தூக்கிக் கொண்டு ஓடும் கீதாரியின் செயல் பிரமிக்க வைக்கிறது. மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கினை மனிதன் மட்டுமே தீர்க்க முடியும்.

ராமு கீதாரியின் வாழ்க்கை முழுவதுமே தன்பயன் கருதாமல் பிறருக்குதவுவதாய் இருக்கிறது. அவரை இயக்குவது எது? பைத்தியக்காரப் பெண்ணின் பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படுகையில் மனைவியைத் தூரத் தள்ளிவிட்டு ஆடுகளுக்குப் பிரசவம் பார்த்த அனுபவம் துணையாக ராமுகீதாரி தன்கையை விட்டு தலையைத் திருப்பி குழந்தைகளைத் தாயின் வயிற்றிலிருந்து துணிச்சலுடன் இழுத்துப் போடுவதும், இரு குழந்தைகளில் ஒன்றை யாருமே எடுத்துச் சென்று வளர்க்கப் பொறுப்பேற்காதபோது, தானே முன்வருவதும் மனித நேயப் பண்பின் உச்சம். நாவல் முழுவதிலுமே ராமுகீதாரி நியாயத்துக்காகச் செயலாற்றுவதைப் பார்க்கிறோம். பிரச்னைகளின்போது அவர் மேற்கொள்ளும் முடிவுகளும் அதனைத் தொடர்ந்த செயல்பாடுகளும் அறம் அல்லது சமூக அக்கறை என்ற எந்தக் கோட்பாட்டு உணர்வுமின்றி அவ்வாறு செயல்பட வேண்டியது தான் மனித இயல்பு' என்ற வகையில் அவர் செயலாற்றுவதைப் பார்க்கிறோம்.

பைத்தியத்துக்குப் பிறந்த கச்சாவை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்வித்து நல்ல வாழ்க்கையை ஆடுமேய்க்கும் கீதாரி ஏற்படுத்திக் கொடுக்கிறார். ஆனால் நிலபுலங்கள் உடைய ஊர் முக்கியஸ்தரான கரையங்காட்டு சாம்பசிவமோ கச்சாவுக்கு மூத்த சிவப்பாயியை வளர்த்து அவள் பெரியவளான பிறகு அவரே பெண்டாள முயற்சிக்கிறார். அதைப் புரிந்து கொண்ட சிவப்பாயி தற்கொலை செய்து கொள்கிறாள். இருமைகளின் வேறுபாட்டுத் துல்லியம் தெள்ளத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.

இடையர்களின் வாழ்க்கைச் சூழல் அவர்களுக்குள் சகிப்புத்தன்மையை வளர்த்திருக்கிறது. தான் செய்யாத குற்றத்துக்காக அடிபடும் போதும் எப்போதாவது தன் கவனிப்பிலுள்ள ஆடு வெள்ளாமையை மேய்ந்ததற்கான தண்டனையாக நினைத்து சகித்துக் கொள்ளும் பக்குவம் ஆச்சரியமானது. சில விவசாயிகள் சரியான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும்போது கூட ஏதும் செய்ய இயலாமல் தமக்குள் தாமே அடங்கிப்போகும் உணர்வு நமக்கு பச்சாத்தாபத்தை ஏற்படுத்துகிறது.

இடையர்களின் கிடை வருகிறதென்றாலே அக்கிடைகளிலிருந்து ஆடுகள் திருடுவதை சில சமூகங்கள் குற்றமாகவே கருதுவதில்லை. அதைத் தமது பாரம்பய உரிமையென்று கருதுவது வழக்கத்தில் இருந்தது. இப்போதும் இது வழக்கத்தில் உள்ளதா எனத் தெரியவில்லை. அது ஏதோ ஒரு வீர தீரச் செயல் போல மதிக்கப்பட்டது. அவ்வாறு திருடப்பட்ட ஆட்டுகறியை கிராமம் முழுவதும் பங்கிட்டுக்கொள்வதும் நடைமுறையிலிருந்தது. அது போன்ற நிகழ்ச்சியொன்றை இந்நாவல் குறிப்பிட்டுச் செல்கிறது. கிடைகளைச் சுற்றி பூச்சி முட்களால் வேலி அமைத்து விட்ட திருப்தியில் பல நாட்கள் உறங்காத அலுப்பில் கிடைக்காரர்கள் உறங்குகிற நேரத்தில் முட்சுவன் மேல் பலகைகளைப் படுக்கவைத்து ஆடுகளைத் திருடிச் சென்று விடுகிறார்கள் காலையில் எழுந்து விபரம் தெரிந்த அந்தக் கிடைக்காரர்களின் ஏமாற்றமும் இழப்பும் நமக்குள் இரக்கத்தை ஏற்படுத்துகிறது.

பகலெல்லாம் ஆடுகளுக்கு மேய்ச்சல் தேடி அலைச்சல், இரவில் நரிகளிடமிருந்தும் கள்ளர்களிடமிருந்தும் ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக விழித்திருக்க வேண்டிய கட்டாயம், இதற்கு மத்தியில் வயல் வரப்பின் மேல் பனை ஓலையே விரிப்பாகப் படுத்திருக்கும் போது கூட “இந்தச் சுகம் என்னைப் படைத்த பரமசிவனுக்குக் கூட கிடையாது'' என திருப்திகொள்ளும் மனநிலை, இடையர்கள் உண்மையிலேயே ஆச்சயப்பட வைப்பவர்கள்.

அரைப்பதற்கு அம்மியில்லாமல் ஊருக்குள் சென்று வெஞ்சனம் அரைக்கும் கிடைக்காரப் பெண்களின் சிரமம், அந்தச் சிரமத்துக்கிடையிலும் கெஞ்சிக் கூத்தாடி அரைத்துக்கொண்டு வருகிற சாமர்த்தியம் அரைக்காமலேயே கூட குழம்பு வைத்து சமையலைச் சமாளிக்கும் திறம், எல்லாமே நாவலில் வெளிப்பட்டிருக்கின்றன. இடையர்களின் பருப்புக் குழம்பும் “இடையன்புளி'' யென்றே அழைக்கப்படும் பச்சைப் புளிக்கரைசலும் நாவுக்கு உணர்வூட்டுபவை. அந்த ருசிக்காகவே இடையர்களுடன் இரவு உணவருந்த விரும்பும் ஊர்க்காரர்களும் உண்டு.

கொட்டும் மழையில் பிரப்பங்கொடிகளை அறுத்துப்போட்டு கூளங்களின் மெத்தையில் சுகங்காணும் கிடைக்காரர் வாழ்க்கை பாம்புகளின் மத்தியிலும் இயற்கையோடு இசைந்த வாழ்க்கை, மனித சஞ்சாரமற்ற கடல் நடுவே மன்னார மேய்ச்சல், தடிக்கம்போடு மணமகனாக திருமணம், அண்ணன் இறந்தால் அவன் மனைவியைத் தம்பிக்கு திருமணம் செய்துவைக்கும் கருணை, சித்தப்பனையும் மணக்கத் தடையில்லாத எளிய மரபுகள் எனப் பல தகவல்களையும் இந்நாவல் சொல்லிச் செல்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் விரிவாகவே பேசப்படுகின்றன. பெண் துணையில்லாத நிலையில் பூப்படையும் பெண்ணின் துக்கம், தன்னை விரும்பும் துணையோடு அக்கணத்தை அனுபவித்து மகிழும் இயற்கையான பெண்மனம், தன்னை ஒதுக்கிவிட்டு வேறு துணை நாடும் கணவனோடு வாழ்வதில்லையென்று கைக்கொள்ளும் வைராக்கியம் எனப்பலவற்றைக் குறிப்பிட இயலுகிறது.

மனிதன் நல்லவனாக உருப்பெற்றாலும் சில உறவுகளால் திசைமாறுவது யதார்த்த வாழ்வின் சிக்கல்களில் ஒன்று. ராமுவால் வளர்க்கப்பெற்ற வெள்ளைச்சாமி அவனது அண்ணனின் சுயநல உறவுக்காரர்களால் ராமுவுக்கெதிராகவும் கச்சாவுக்கெதிராகவும் மாறுகின்ற சிக்கல் சிறிது சிறிதாக உருப்பெறுவதை நாவலில் காணமுடிகிறது. வெள்ளைச் சாமியின் தகப்பன் சேதுவுக்கு சேர்வையால் ஏற்படுகின்ற துன்பங்கள் தற்கொலைக்குத் துரத்துவதை இயல்பாகச் சித்திப்பதன் மூலமும் கரையங்காட்டுச் சாம்பசிவத்தின் நடவடிக்கை மூலமும் நிலஉடமை தோற்றுவித்துள்ள கொடிய பண்புகள் உணர்த்தப்பட்டுள்ளன.

நாவல் முழுவதும் ராமு ஒருவரே நம்பிக்கைவாதியாகவும் நியாயத்தின் பாற்பட்டவராகச் செயலாற்றுபவராகவும் உள்ளார். ராமுகீதாரியின் மனைவி இருளாயி, அவரது வளர்ப்பு மகள் கச்சா இருவருமே இயல்பான பெண்பாத்திரங்கள். இதர பாத்திரங்கள் பண்புக் குறைபாடுடையவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். தள்ளாத காலத்திலும் தான் வளர்த்த மகளின் இறப்பின் சோகத்தைத் தாங்கிக் கொண்டு அவள் மகனை வளர்த்தெடுக்கும் ராமுவின் நம்பிக்கை மகிழ்ச்சியேற்படுத்துகிறது. கீதாரியைப் படித்து முடிக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது. இன்னொரு முறை ஆழமாக வாசிக்க வேண்டுமென்ற தீர்மானத்துடனேயே நாவலைக் கீழேவைக்க முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட இனத்தின், வட்டாரத்தின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தாலும் இந்நாவலில் நடமாடுகிற மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பொதுவான மனிதநேயச் சிந்தனைக்கு, அதன் உயர்வுக்கு, அதை வளர்த்தெடுப்பதற்கு ஒரு முன் மாதிப் பாத்திரமாக ராமுகீதாரியைத் குறிப்பிடலாம்.

யதார்த்த நாவல்கள் சம்பவங்களின் கோர்வையாகவே உள்ளன. எனினும் ஆசிரியரின் தெரிவும் அதனைச் சுவைபடச் சொல்லிச் செல்வதும் மிக முக்கியமானது. தமிழ்ச் செல்வியின் தெரிவுகள் சிறப்பானவை எனினும் முழுமையான நாவலைப் படித்த ஒரு திருப்தி ஏற்படவில்லை. இடையர் வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தோடும் இயங்குகின்ற இன்னொரு நாவலின் தேவையை இந்நாவல் தோற்றுவிக்கிறது.

Pin It