அவ்வளவு தான்

Timeவகை வகையாக சமைத்து வைக்கப்பட்ட
ருசியான உணவுகள்
நாம்.

எங்கிருந்தாலும்
சுவைத்துண்ணப்படவுள்ள தீனியன்றி
வேறெதுவாகவும் மாறமுடியாது
நம்மால்.

தீராத பசியோடு
தின்று தீர்க்கவென்று
அலைந்து திரிகிறது
காலம்.

விலகல்

சவூதியோ துபாய்யோ
தூரதேசத்தில் இருப்பது
கூடுதல் தகுதியாகிப் போனது
மாப்பிள்ளையாகிறவனுக்கு.

துபாய்காரனென்பதற்காக
முகம் பார்க்காமலே
கை பிடிக்க துணிந்தவள்
கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்
தூரதேசத்திலிருந்துக் கொண்டே
துரத்தியடிப்பான்
தாய்வீட்டிற்கு என்றும்,
இரவில் அறிமுகமானவன்
இரவையே அறிமுகப்படுத்துவான் என்றும்.

தொலைபேசியிலேயே
வாழ கற்றுக்கொண்டவர்கள்
பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கும்
தொலைபேசியில்
வாழ்க்கையை
முடித்துக்கொள்ளவும்
பழக்கிக்கொண்டார்கள்.

‘தலாக்’
தீர்வா.. தண்டனையா..?
விடுதலையா.. வேதனையா?


இ.இசாக், துபாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It