Poor Boyஆட்டுக் கறி சாப்பிடுவதற்கு
ஆசை வந்ததனால்
அம்மாவிடம் கேட்டுவிட்டு
அடம் பிடித்தான்
மகன்.

'கையில் மடியில் இந்த நேரம்
கால் காசுக்கு வழியில்லை
அடுத்த மாசந்தான்
ஆத்துலெ தண்ணிவரும்
அப்போது வேலை வரும்
வாங்கித் தாரேன்.' என்றாள்
அம்மா.

எடக்குப் செய்யும் பிள்ளையை
அடக்கி அதட்டி மிரட்டி விட்டு,
'சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால்
தோலை உரிப்பேன்.' என்றான்
அப்பன்.

கஷ்டப் பட்டு காசைச் சேர்த்து
கால் கிலோ கறியும் வாங்கி
பக்குவமாய் சமைத்து வைத்து
பள்ளி விட்டு வரும் மகனைப்
பார்த்திருந்தாள்
தாய்.

மோப்ப நாய்போல் வந்த புருசன்
மெதுவாய்க் குடிசை உள்ளே புகுந்தான்.
மது பாட்டிலை நடுவே வைத்து
குழம்புச் சட்டியை எடுத்து வந்தான்
வெறியோடு....

கெஞ்சிப் பார்த்தாள்
கொஞ்சிப் கேட்டாள்
கொஞ்சம் மிச்சம்
மகனுக் கென்றாள்
காதில் எதையும் வாங்காமல்
காலிசெய்தான் மிஞ்சாமல்
போதையோடு....

அடிக்குப் பயந்து வெளியே போய்
அழுது புலம்பி சாபம் விட்டு
ஆறாய் வடித்தாள் கண்ணீரை
ஆசையாய் வரும் மகனை
பார்த்து.... 

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It