Beggerஅட்சயப் பாத்திரத்தில்
பிச்சை கேட்குமிவன்
நிச்சயமாய் கேட்பது
ஒருநேர உணவு அல்ல

எழுதாத காகிதத்தின்
ஏக்கத்தின் சாயல் போல
விடியாத இரவு அதன்
விழிபூத்த சோகம் போல்

தாகத்தின் வேதனையை
தனக்குள்ளே புதைத்து
தவிக்கின்ற உள்ளத்தின்
தகிப்புக்கு தணிப்பு வேண்டி

வீடுதோறும் வாசலிலே
வரம் கேட்கும் இவன்
வித்தியாசமான ஒரு
விசித்திரப் பிச்சைக்காரன்

வயிற்றுக்குப் பசியென்று
வாடி அவன் நிற்கவில்லை
வாட்டும் கேள்விகளினால்
விழையும் அறிவுப்பசிக்காக ....

முகத்தில் தாடியுடன்
மூளையில் கேள்வியுடன்
முழுநாளும் அலைகின்றான்
முட்டாள்கள் உலகினிலே

தானாக விழுந்த விதை
தரம் பார்த்து விழுவதில்லை
தரணியிலே பிறக்கையிலே
தகுதி சேர்ந்து பிறப்பதில்லை

முக்கோண வடிவத்தில்
முடிக்காத பக்கம் ஒன்று
முழுமதியின் பரப்பினிலே
மிதக்கின்ற களங்கம் போல்

பிச்சைக்காரன் தான் அவன்
புரியாத உலகத்தில்; என்றுமே
பசிக்கு பிச்சை கேட்கவில்லை
பாஷைக்கு ஓசை கேட்கின்றான்

சக்தி சக்திதாசன். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.