Loversநீரோட்டத்தைக் கடக்கவென
பாக்குமரங்களிரண்டு பாலங்களாகவிருந்த
தொலைவில் மலையும் தென்னந்தோப்பும்
உரசும் ஆற்றங்கரையோர வயல்வெளி
நினைவிருக்கிறதா உனக்கு
பரப்பு தேய்ந்து மழுங்கிய பாலத்தில்
நம்மிரு சோடிப் பாதங்களும்
எதிரெதிர் வர சமநிலை தவறி நீ
வழுக்கி விழப்போகையில்
நான் கரங்களால் தாங்கிக் கொண்டேன்
வயலும் நாற்றும் கதிர்களும்
நீரும் நீந்திய மீன்களும்
தென்னங்கீற்றுகளும் இளநீர்க்குலைகளும் கூட
அவ்வேளை நானுன்னை
கரம் பற்றியதாகக் காற்றிடம்
கிசுகிசுத்துக் கொண்டன

விழப்பார்த்தவள் சிறிதுபடபடப்போடு
நன்றி சொல்லிப் போய்விட்டாய்
இப்படியானதொரு முதல் சந்திப்பில்
காதல் காய்ச்சல் கண்ட எனக்கு
நீரோடைப் பேயடித்ததாக
வீட்டுக்குள் பேசிக்கொண்டனர்
விழிகளால் அடித்து வீழ்த்தியதோர்
அழகான மோகினிப் பேயென
எப்படிச் சொல்வேன்
எல்லோரிடமும் 

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It