Cruelநெற்றியில் கீறிய நீறும்...
நெஞ்சுக்குக் குறுக்கே போடும்
சிலுவைக் குறியும்...
நேரம் தவறாத பள்ளித்
தொழுகையும்...
உன்னை உண்மையின்
திசையில் திசை
திருப்பி விடும்
என்கிறாய் - நீ

உண்மை அது அல்ல !

"ஆண்டவன் சந்நிதியை
சந்தைக் கடையாக்காதீர்.."
என எருசலேம் ஆலயத்துள்
ஆவேசமாகச் சவுக்கடி கொடுத்த
இயேசுநாதரையே - இன்று
வியாபாரப் பொருளாக்கிவிட்டு
உண்மையைத் தேடுவதாய்ச்
சொல்கிறாய் - நீ

உனக்கும் வாழ்க்கைக்கும்
இடையே
நீதி என்ற பெயரில்
நிமிர்த்திக் கட்டிய
பாறாங்கற் சுவர்களை
உண்மை என்றோதுகின்றாய்!

குத்திப் பேசுவதிலும்...
குதர்க்கமாய்ப் பேசுவதிலும்-வல்ல
மனிதனில் மட்டுமே
உன் உண்மை இருக்கிறதென்கிறாய் - நீ

பேராசையை விட்டெறிந்துவிட்டு
போதிமரத்தடியில் அமர்ந்த
புத்த பிரான்களைவிட...
கண்ணுக்கு முன்னால் தங்கம்
எடுக்கும் பாபாக்கள்தான்
பகவான்கள் என்கிறாய் - நீ

மகான்களைவிடவும்
மந்திரங்களால்தான்
மாங்காய் விழுத்தலாம் என்கிறது -உன்
உண்மை பற்றிய தேடல் !!

ஆயிரம்..இலட்சம்..கோடி..
எண்ணும் ஆசையில்
ஆண்டவன் கோவிலில்
அர்ச்சனைத் தட்டேந்தும்
எம்மைவிட
"ஏதேன்" தோட்டத்து
வெறும் அப்பிளுக்காய்
ஆசைப்பட்ட ஏவாளின் ஆசைதான்
கொடூரமான பேராசை என்று
கூட்டம் போட்டுப் பேசுகின்றாய் !!

கூட்டமான இடத்திலும்
கும்பலிலும் தேடி..
வேறொருவன் கையாலோ...
வாயாலோ... வந்து விழுவதுதான்
உண்மை என்கிறாய் - நீ

உண்மை.. அது அல்ல !!!

அஸ்தமனத்தை
அழகென்று அடம்பிடிப்பவனே !
உண்மையை நீயே...
உனக்காய்.. உன்னுள்..
தேடாமல்
ஊரெல்லாம் தேடி
எத்தனை காலம்
அலையப் போகிறாய் நீ.


தமிழ்சித்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It