love_flowers
விரைவில் சந்திக்கவேண்டுமென
அடவிகளினூடே குறுகியவழிகளில்
பயணிக்குமெனை நிறுத்தியுன்
நலம் விசாரிக்கின்றன விருட்சங்கள்
காலம் முழுவதற்குமாக
ஒரே வண்டினை ஈர்க்கவென
நறுமணங்களைப் போர்த்தியுள்ள உன் பற்றி
வனப்பூக்கள் பொறாமையில் கிசுகிசுக்க
தரைச் சிறுபுற்களும் பஞ்சாகியென்
பாதங்கள் தாங்குகையில்
நதிகளில் கோடு கிழித்து உனைச் சேரப்
பாலங்கள் அமைக்கின்றன நாணல்கள்

மலையடிவாரமொன்றில்
காணக்கிடைக்கா மலரொன்றினைக் கண்டு
நெருங்கியருகில் முகர்ந்ததன் வாசனை பார்க்கிறாய்
கிடைக்க அரியப் பெருமுத்தம்
பேரழகிய பூவிடமிருந்து கிடைத்த மகிழ்வில்
சிலிர்த்துதிர்க்கிறது
எல்லாப் பூக்களுக்குமான நறுமணங்களையும்
பூவைத் தாங்கி நின்ற மரம்
அன்று இரு பூக்களுரசிட
தீப்பற்றும் மலையடிவாரம்

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.