தூங்காதிருப்பவனின் இரவு
----------------------------------------------

அந்தரத்தில் உடலை தக்கையென மிதக்கவிட்டு
இருளைப்பிழிந்து கண்களில் ஊற்றி
தூக்கத்தின் பாதையில் அலைந்து திரியும்
நினைவுகளையெல்லாம் அடக்கிவிட்டு
தூக்கத்தை சேருவதற்குள்
பின்னாலிருந்து அழைப்பு வருகிறது
அடுத்தநாளை தொடங்கவாவென

சுழற்சி!
------------

கீ கீ வென தத்தித் வந்த
யந்திர கிளியின் தலையில்
தட்டிவிட்டு நிமிர்ந்த
குழந்தையின் கண்களில்
படபடத்தது பச்சைக்கிளியொன்று!
வலையில் மாட்டிக்கொண்ட
பச்சைக்கிளியின் படபடப்பில்
அடியோடு பிடுங்கி விழுந்தது
அத்திமரம் ஒன்று!
சரிந்த மரத்தின் அதிர்வில்
மூங்கில்கள் உரசி பற்றிக்கொண்டது
அடர்ந்த வனமொன்று!
தீயின் நாக்குகள்
இட்ட சாபங்கள்
கொன்று குவித்தது
நகரமொன்றை!
ஆளில்லா நகரத்தின் மேல்
எப்போதும் போல்
நகர்ந்துகொண்டிருந்தது
கிழட்டு சூரியன்!

அறை தங்கா கடவுள்
--------------------------------------

உடைந்த முகப் பருவின்
கருஞ்சிவப்பு ரத்தத்தை
கழுவிச்செல்கிறது
கருப்புமை கண்ணீர்
காலச்சுழற்சியின்
45 ஆம் நாளில்!

கருவறையை நீக்குதல்!
---------------------------------------

கடவுள் ஒன்று குடியிருந்த அறை
புரையோடிப்போய் கரையான்கள் புற்றுவைத்தது
கோவிலையே இடிக்கவேண்டி வருமென
கருவறையை பெயர்த்தெடுத்து
வெளியில் வைத்தார்கள்
கையில் கருவறையை ஏந்தியவாறு
கடவுள் கும்பிட்டுகொண்டிருக்கிறது
தான் முன்பு குடியிருந்த கோவிலை

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்…
--------------------------------------------------------

கை நழுவும் சில்லறைகளில்
இன்றாவது கை கூடுமா
மூணு பரோட்டாவும் சால்னாவும்
நெஞ்சு நிமிர்த்தி படுத்திருக்கிறார்
அனுமார், ரோட்டில்!
வரைந்தவன் கேள்விக்குறியாய்
புதிதாய் வரையும் கோட்டில்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்…
அனுமாரை அழித்துவிட்டு அடுத்த படம் வரைவான்

ஊமச்சி அழுத கதை
-----------------------------------

க்கூ க்கூன்னு கேவி அழுவுறா ஊமச்சி
கிணத்தடியில் அழுது நின்னா
பின்வாசல் முற்றத்தில் அழுது நின்னா
தாழ்வாரத்தில அழுது நின்னா
முன் வாசல்ல அழுது நின்னா
வீதில அழுது நின்னா
வேலையிடத்துல அழுது நின்னா
இப்பெல்லாம் கெக்கெக்கேன்னு
சிரிச்சுட்டு சிட்டாட்டம் பறந்து போறா
இப்பயும் அவகண்ணுல தண்ணி வருது
அழுதாளா சிரிச்சாளன்னு
எனக்குத்தான் தெரியல

- ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It