பார்வைக்குச் சிக்காத
தொலைதூரத்தில்
நிரம்பி வழியும் காகிதங்களினூடே
பாதைக்குறுக்கீடுகள்
வலுவற்ற தொடர்புகள்
சுழன்றோடும் இசைவு
என
எத்தனையோ அபாயங்களைத் தாண்டி
என் பட்டம் பறந்துகொண்டிருந்தது

ஒரு புள்ளியாய்
மேகம் தொடும் பறவையாய்
வானில் நெளியும் பாம்பாய்
பின்வாங்கும் மீனாய்
அங்கங்கே கவிதை எழுதிக் கொண்டிருந்தது

அருகருகே தழுவும் பட்டங்களால்
பார்வை படபடக்க
நூல் சுண்டியிழுத்தேன்
மோதலுக்குத் தாளாத காகிதம்
சிறகறுந்த பறவைபோல்
வீழ்ந்துகொண்டிருந்தது

நூலோடு அறுந்த
பட்டத்தின் வலியை
கண்களில் மறைத்தபடி,
அதன் வீழ்ச்சியை
ரசிப்பதா அழுவதா எனத் தெரியாமல்
திக்கற்று நின்றுகொண்டிருந்தேன்

அது இந்நேரம் யாருடைய
காலடியிலோ விழுந்திருக்கக் கூடும்


இப்பொழுது
என்னுடைய அடுத்த குறியெல்லாம்
வேறொரு பட்டம்
செய்வதிலேதான் இருந்தது
அறுந்த பட்டத்தின் மீதல்ல

ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It