கடந்து போன நேரம்

கனவின் சூட்சம பாசறையில்
நிகழ்காலத்தை இழந்துவிட்டிருந்த நான்
பிரக்ஞை திரும்பியதும்
திடிரென எழுந்து
விழித்து பார்த்ததில்
பகலின் பிரவாகம்
ஒருபாதி முடிந்திருந்தது.

ஜன்னல் வழியே
கசியும் வெளிச்சத்தில்
தெரியவருகிறது
எனது அறையின் நிர்வாணம்.

படுக்கையிலிருந்து
தவறி விழுந்த
கடிகாரத்தின் முட்கள்
நேரம் காட்டத்தவறி
அதன் சுழற்சியை
இழந்துவிட்டுருந்தன.

எப்போதும் எனது வீதியை
கடந்து போகும் தருணங்களில்
குரலெழுப்பும் இரயில்
இன்று காலதாமதமாயிருக்கலாம்
அல்லது சற்று முன்பே மௌனமாய்
கடந்துபோயிருக்கலாம்.

சுடுவெய்யிலில்
வெடிப்புற்ற பாதத்தோடு
வெளியே வந்து நின்று

பூமியின் தரையில்
என் முழு உருவம்
நிழலிழந்து கிடப்பதில்
எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்
மணி 12 ஐ தொட்டிருக்கும் என.

பிரசவம்

எல்லாக் கடிகாரத்தின் சுழற்சியையும் நிறுத்திவிட்டேன்
அனைத்து அறைக்கதவுகளையும் சாளரங்களையும் தாழிட்டுவிட்டேன்
எரியும் விளக்குகளை ஒவ்வொன்றாய் அணைத்துவிட்டேன்
இருள் வியாபிக்கும் அளவுக்கு எனது இமைகளையும் மூடிவிட்டேன்

தொடர்பற்று கிடக்கின்றது எனது தனிமை

இருந்தும் எப்படியோ எனக்கு தெரிந்துவிடுகின்றது
பகல் பொழுதின் பிரசவம்.

- இரஞ்சித் பிரேத்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It