எரித்தபடியும்..

எரிந்து புகையூதியபடியுமாய்

kinniya_butterfliesதடதடத்து நகரும் ரயிலோசையினூடே

சிரிக்கும் உன் குரல்

கையசைத்தபடியே மெல்ல மெல்லத் தேய்ந்து மறையும்.

பிறகான கணங்களோ சடமாகி உறையும்.

சமையலும் சலவையும் பரிமாறலுங்கூட

நிச்சயிக்கப்பட்ட அதன் பயணப்பாதை வழியே நிகழ

உசிரு மட்டும் தண்டவாளங்களை

உரசியுரசித் திரும்பும்.

ஒருநாள்..

நீ மீளுவாய் நம் வாசலுக்கு

நேற்றைய புன்னகையின் தீரா நறுமணங்களோடு.

காற்றில் மிதந்து வந்த உன் கால்தடங்களில்

சட்டகத்துச் சுவரோவியம்

மறுபடியும் உயிர்க்கும்.

கசங்கிய பொதியாய் கவிழும்

பயணக்களைகளை மீறித் ததும்பும்

பார்வைகளி;ன் பரவசங்களினூடே

கடிகாரமுட்களைக் கழற்றி வீசியபடியே

நீ சந்தித்த வேற்றுமுகங்களை...

சலசலத்தோடிய வெள்ளிநதிகளை...

சுவாசம் குளிர்த்திய நந்தவனங்களை...

இன்னமும் உன்

சாதனைகளை, சந்தோசங்களை

சங்கடங்களை,சலிப்புகளையென

இடைவிடாது ஒப்புவிப்பாய்

இளைய மகளின் பாவனைகளோடு.

குதித்துப் பாய்ந்த

அவ்வார்த்தைகள் ஒவ்வொன்றுமே

வண்ணப்பூச்சிகளாய் உருமாறி

எமைச் சுற்றிச்சுற்றிச் சிறகசைக்க

பிள்ளைப் பருவத்து நாமும்

அதன் தோப்புக்குள்ளே

மேலுமிரு வண்ணாத்திகளாய்..!

-     கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It