Rainy forest
மரங்கள் சூழ்ந்த
வனம் இன்று செழித்துக் கிடக்கின்றது
வழக்கத்தைக் காட்டிலும் அதிகப் பசுமையாய்
அருவியின் குளிர்ந்த நீர்த்துளிகள் கரும் பாறைகளிலிலும்
என் முகத்திலும் விழுந்து உடைகின்றன
எதையோ முணுமுணுத்தவாறு
மலையுச்சியிலிருந்து வழியும் ஓடை
சில்லென்று பாடிச் செல்கின்றது
பிரிவின் இரகசியப் பாடலொன்றை
இலைகள் சேகரித்துக் கொண்டிருக்கின்றன
எண்ணிலடங்கா மழைத்துளிகளை
மிகவும் அமைதியாக
பொழிந்தது போதுமெனக் கலைந்தோட முயலும்
கார்மேகங்களை இழுத்து உலுக்குகின்றேன்
கொட்டிவிட்டுப் போகின்றன
மீதமிருந்த நம் பிரியங்களை

நானும்
இவ்வனமும் இன்று செழித்திருக்கின்றோம்
இம்மழையால்

சாலைகளில்
சேறும் சகதியுடனும்
அழுகிய காய்கறிகளின் விரும்பத்தகாத வாசனையுடனும்
போக்குவரத்து நெரிசலில் பொறுமையிழந்தவாறும்
கையில் கறுப்புக் குடையை பிடித்தபடியும்
பெரும் இடையூறாய்த் தொடரக்கூடும்
நகரத்துவாசிகள்

இதே மழைகாலப்பொழுதை

குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It