சுற்றிவளைக்கப்பட்ட கோயில் வேலிகளுக்கும்
கோயிலுக்குமிடையில்
திரிகிற கிழவனின் புலம்பலும்
பஜனையோடு சேர்ந்து ஒலித்தெழுகிறது.

தீச்சட்டிகளை நீ சுமந்தபடி வருகிறாய்
தீயினை மிதித்தெழுந்து செல்கையில்
உள்வீதிகள் எரிந்து கருகின
உனது தலையில் எரிகிற தீ முகத்தில் வழிகிறது.

சிலுவையைப்போல மிகவும் பாரமான
காவடியைச் சுமந்தபடி நான் வந்து சேர்ந்தேன்.
சிறகு உடைக்கப்பட்டவன்
பறவைக்காவடியில் தொங்குகிறான்
இந்த வருடமும்
ஆழ்வார் கோயிலைவிட்டு வெளியில் வந்தார்.

திருப்பாற்கடலை படைகள்
சூழ்ந்து கொண்டன.
அவதாரங்களின் தோல்வியுடன்
அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும்
ஆழ்வாரை சுமந்து சென்றனர்.

கதைகளில் எழுதப்பட்ட அசுரர்கள்
ஆழ்வாரை சோதனையிட கீழே இறக்கினர்
அழிக்கப்பட்டதாய் கூறப்பட்ட
அசுரர்கள் சப்பாத்துக்களுடன்
துப்பாக்கிகளால் குறிபார்த்தபடி
திருப்பாற்கடலில் நின்றனர்.

அவதாரங்கள் முடிந்துபோக
இறுகி சிலையாகிய ஆழ்வாரை
அந்தக்கிழவன் ஏசியபடி கும்பிடுகிறான்
கிழவன் திருப்பாற்கடலில்
தீர்த்தமாடுகிற ஆழ்வாரைப் பார்ப்பதற்காய்
கெஞ்சித் தோற்றுப்போகையில்
ஆழ்வார் திருப்பாற்கடலை அண்மித்தார்.

சில வெடிகள் அதிர்ந்தன
திருப்பாற்கடல் குருதியால் நிரம்பியது.
உன்னைக் காணவில்லை.
நீ சுமந்த தீச்சட்டியின் நெருப்புக்கட்டிகள் கிடந்தன.
எனது காவடி
ஒரு மரத்தின்கீழ் தனியே கிடந்தது.

ஆழ்வார் கோயிலுக்குத் திரும்பவில்லை.
கிழவனும் ஆழ்வாருக்காய் காத்திருக்கவில்லை.
---------------------------------------------------------------------

14.10.2008. யாழ்ப்பாணம் புலோலி வல்லிபுரம் ஆழ்வார்கோயில்

தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It