01
இசைபட...!

அனேக நேரங்களில்
Modern art
அடித்துப் பிடித்து ஓடி வரும்
ஒருவனுக்கோ ஒருத்திக்கோ
காத்திருக்க முடியாமல்
விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்
வெறுமனே இருக்க நேர்கிறது.

யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்
பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.

முன்பைவிட விரைவாய் நகரும்
இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்
வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்
காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைபட ஒன்றும் நேர்கிறது
இவளது வருகையைப் போல.


02
விட்டுவிடுங்கள்...!

விட்டுவிடுங்கள்
என்னை.

உங்களின்
விளையாட்டுகளிலிருந்து.
உங்கள் விளையாட்டு விதிகளோடு ஏதும்
உடன்பாடில்லை எனக்கு.

அதிகமும் ஆசையுடன் ஆட வந்தவன்
குதூகலத்தைக் குலைத்தவை உங்கள் விதிகள்.

விளையாட்டு வினையாகும் வித்தை படித்தவனை - உங்கள்
வினையான விளையாட்டால் விலகச் செய்தவர்கள் நீங்கள்.

மேலும்

விளையாட்டை விளையாட்டாய்
விளையாடத் தெரியவில்லை உங்களுக்கு.


03
சிதறும் பிம்பங்கள்..!

எனக்கான பிம்பத்தை நீ
எது எதற்கோ உடைப்பதுவும்

உனக்கான பிம்பத்தை நான்
உள்வைத்தே உறைவதுவும்

இழுத்துப் பிடித்திருந்தால்
இன்னும் கூட வாழ்ந்திருக்கும்

பிம்பங்களில் நிலைப்பதில்லை
பேரன்பும் பெருவாழ்வும்.


04
ஆக்ரமிப்பு...

புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி
பொருட்படுத்துவதில்லை நீங்கள்.

புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி
புரிவதுமில்லை உங்களுக்கு.

கேட்காத காதுகளில் கேள்வியின்றி
திணித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

கண்கள் உங்களை கவனிக்கிறதாவென்று கூட
கவனிப்பதில்லை நீங்கள்.

மற்றொரு காதால் வெளியேற்றப்பட்டாலும்
மறுபடி மறுபடி வந்து ஏற்றிச் செல்கிறீர்கள்.

திறந்தபடி இந்த காதுகள் இருப்பது
திரிந்தலையும் உங்களுக்கு தோதாகவா?

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It