அடர்ந்ததாயும்,
ஆகாயத்தின் பரந்த வெளியில்
திசைகளின்றி திரிவதாயும்
நகரும் ஓவியமாயும் இருக்கின்ற மேகம்
நொடிப் பொழுதேனும்
ஒளிகற்றைகளை உள்வாங்கிக்கொண்டு
இருளின் அறிமுகத்தைச் செய்து,
பிழியப்படுதலை விரும்பாது
அனுமானிக்க முடியாத கணத்தில்
பொழிதலை துவங்குகிறது.

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து
நிலத்தின் ஏற்ற இறக்கங்களில்
தன் இருத்தலை உணர்த்திவிட்டு
அங்கும் இங்கும் எங்குமாய்
எல்லாமுமாய் எல்லாவற்றிலுமாய்
நிரம்பி வழிகிறது.

பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியினூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது..

உன் விரல்நுனி எப்பொழுதாவது
இந்த பேரிசைக்கான குறிப்புகளை
என்னில் விட்டுச் சென்றதுண்டு....


✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.