Pain of Muslim
ஒரே பிறையைத்தான்
இருவரும் பார்க்கிறோம்
களங்கம் அதிலில்லை தோழா
காணும் நம் கண்களில்;

செடிகளின் பசுமை
உனக்குப் பிடிக்கிறது;
நான் உடுத்திக்கொண்டால்
தீண்டா நிறம் உனக்கு

வெடி வெடித்தவன்
தலையில் குல்லாவும்
தாடையில் தாடியும் இருந்தால்
நாங்கள் அனைவரும்
மொட்டை போட்டு
முகத்தில் முழுச்சவரம்
செய்ய வேண்டுமா?

பிடித்த நடிகன் முதல்
விளையாட்டு வீரன் வரை
'கான்'களின் காலெண்டர்
உன் வரவேற்பறையில்;
என்னை வரவேற்க மட்டும்
என் கடவுளோ உன் கடவுளோ
குறுக்கே நிற்கிறார்

எதிர் வீட்டில் என்னாரை (NRI)
அண்டை வீட்டில் அமெரிக்கன்
என்று பெருமைப் படுகிறாய்
அருகில் என்னை மட்டும்
அண்டவிடாமல் செய்கிறாய்

எங்கள் இல்லங்களில்
வெடிகுண்டு தயாரிப்பது
குடிசைத் தொழிலென்று
எண்ணுகின்றாய் போலும்
குண்டுகளுக்கு மதமில்லை
அவைகள் எல்லா
உடல்களையும் சிதறடிக்கும்
என்றுனக்குத் தெரியாதா?

நீயொன்றும் மதவெறியனன்று;
நீ 'ஹாப்பி கிறிஸ்மஸ்'
பாடுவதைப் பார்த்திருக்கிறேன்
நானும் தான் நண்பா
'கணபதி பப்பா மோரியா' என்றேன்
நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும்
'ஈத் முபாரக்' என்று.


அனுஜன்யா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It