பிறகு 3

ஆதியின் ஆதி நீர்
அந்தத்தின் ஆதிக் காற்று

ஓரு நகரம் தன் சலங்கையை கழற்றிக்
கொண்டிருக்கிறது

குழந்தையின் குரல் மிகச்சரியாக
பொருந்துகிறது அகாலத்தின் மதிற்சுவர் பூனைக்கு
சிலிர்த்து பாதியில் திறக்கப்பெறுகிறது கழிவறை

கர்ப்பிணியின் உறக்கம்
இறங்கிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு நொடியாக

தனது நாட்காட்டியில் இருந்து
கிழமைகளை தொலைத்து கொண்டிருக்கிறான்
தீர்க்கதரிசி

நண்பகலில் எதிர்ப்படுகிறது
திசைகளை இடமாற்றும்
ஒரு வெளவால்

அதன் ஒரு மீளாத நுண்ணொலி
எழுதிச் செல்கிறது
இரவு நீண்ட பகலுக்கான
முதல் வரியை

பிறகு 2

நீல நிறத்தில் இரத்தமுடைய
கரங்களால் பிணையப் பெற்றிருக்கிறது
கவளமாய் உயிர்

மஞ்சள் இரத்தம் குடிக்கும்
தளிரின் நரம்புகள் முதல்மிடறாக
பதியன் வேரில்

பதியன் நிர்வாணமாக்குகிறது
முட்களை ஊட்டமூட்டி

தோலுரிகிற உள்ளங்கை ரேகை
பச்சையம்!

வேர்களில் சூழ்கிறது
கிரகம் பிறக்கும் உஷ்ணம்

ஒரு வஞ்சத்தைப் போல
ஒளித்து வைத்திருக்கிறது முதல்பூவை

காம்பின் நிறமுடைய
உதடுகளில் இருந்து கசியும்
கருணைக்காக.

பிறகு 1

நிலாத்தீர்ந்த
கருங்கொற்றக்குடையின் கீழுள்ள
பூமியில்
இடறித்திறந்த ஊற்றுக்கண்களில்
உனது பெருவிரல் ரேகை
நகப்பிசிறோடு...
சாணை பிடிக்கிறது
நிழலை கிழிக்கிற பார்வைக்கு
இமைக்கும் பொழுதுக்குரிய ஒளித்தூரம்
அடைக்கோழியின் அடிவயிறும்
மணல்வீடுடை குழந்தை கைநுழைகிற
வாசல் நேர்கிற புறங்கை புழுக்கமும்
அக்குள் வியர்வை

தகனப்படுகிற பிரேதமாய்
விறைத்தெழும் திமிருக்கு
வெட்டியான் வாசந்தரை தொடுகிற தருணங்களில்
ஸ்பரிசருசி காற்றிலிருந்து
பிறந்திருக்கக்கூடும்

கண் பொத்தி விளையாட்டில்
உன் அண்மை போன்ற பிம்பங்கள்

துரு ஏறிக்கொண்டிருக்கிறது
அவனது பெயரில்

சதுரங்க குதிரை
பயணிக்கிறது கறுப்பு வெள்ளைத்
தடங்களில்

மாற்றுச் சான்றிதழின்
அங்க அடையாள குறிப்புகளில் ஒரு
பதிவாய் இருக்கிறது
விவகாரம் குன்றிய தழும்பு

சொற்களின் தசம இடைவெளி
பெருகி ஒரு கழிவறை
சித்திரமாய் கிறுக்கப்பெற்றிருக்கிறது
உறவு

அனிச்சை கணங்கள்
கிரகணமாகும் ஒரு சந்திப்பு
மழை நனைக்கும்
வைக்கோல் போர்...!
பின்னங்கள் எழுதிய கதவுகள்
எண்கள் துணைகொண்ட பேருந்துகள்
வானூர்தி புகை@
ஒரு தூசு ஜனிக்கிறது

கதவுகள்

பின்னங்கள் எழுதப்பட்டிருக்கும்
எல்லாக் கதவுகளிலும்
ஒரு குழந்தையின் தாழ்ந்த கைரேகை
ஒரு மரண நாளின் ஒப்பாரி எதிரொலி
முண்டங்கள் உலவுவதாய் வதந்தி திரிந்த போது
போடப்பட்ட கூட்டல் குறி
ஓரு சந்திக்கப்பிரியப்படாதவரின் பிரிவின்போது
அறைந்து சாத்தப்பட்ட கீறல்
என அனைத்து தழும்புகளும்
அதனதன் அழுத்த பேதங்களுடன்
இருக்கத்தான் செய்கிறது
ஆனால் விற்கப்பட்ட
வாழ்ந்து கெட்டவனின் வீட்டில்
பெயர்க்கப்பட்ட கதவுகளுக்காய்
குரைத்துக் களைக்கிற
பெட்டைநாயின் கதறலை
அடக்க முயல்கிறவனின்
வலி
இறந்தவன் கிடைக்காமல்
புகைப்படம் மட்டும் வைத்து
அழநேர்கிற
சாவுதனை ஒக்கும்!
மற்றபடி சந்தேகம் தீர்க்க
மையத்தில் புதுக்கண்ணாடி
பதிக்கப்படாத எல்லாக் கதவுகளும்
அழகானவையே!

பலூன் விளையாட்டு

ருசியற்றதோர் துளிக்கான
பிரார்த்தனையில்
ஓளிர்ந்திருக்கின்றன
ஓரு சிசு, ஒரு மட்கத்துவங்கின விதை
ஓரு இமை திறவா துளிர்

அமிலத்தில் நனைத்து
வைக்கப்பட்டிருக்கிறது
அவரவர்க்கான கலன்கள்

சபிக்கப் பெற்றது
வற்றப் பருகின முலை
ஒரு கந்தகப்புகை
புணர்ந்த மேகம்
புல்லில் படிகிற விடியல்துளி

கிரகம் கைவிடப்பட்டது
நோவாவின் கப்பலில்
இருந்து

புணர நிர்பந்தப்படும்
அணுக்களின் மைதுனம் மெல்லப்
புசிக்கிறது
பேரண்டத்தின்
கரங்களை...

- சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It