மலர்களின் வாசனை
நிறங்களில் ஊறிப் பெயர்ந்து
மலர்களையே சுற்றி அலைகிறது

கனிகளின் வாசனை
சுவையின் நரம்புகளில் விளைந்து
கனிகளைச் சூழவும் சிறகடிக்கிறது

மலத்தின் வாசனை
வயிற்றின் அழகிலிருந்து
நழுவி நகர்ந்து செல்கிறது
ஒவ்வொரு புலனினூடும்

மாமிசத்தின் வாசனை
விந்தின் அணுக்களில் முளைத்து
குருதியாய்ப் பெருகி ஓடுகிறது
உயிர் முகம் தேடி

கடலின் வாசனை
நீர்ப்படிகத்தின் விழிகளிலிருந்து
வடிந்து பரவுகிறது காற்றின் வெளியில்

மலைகளின் வாசனை
பாறைகளின் இதயத்தில் மலர்ந்து
நதியிலும் மரங்களிலும்
ஊடுருவிச் செல்கிறது
கனன்று

உனது வாசனை
உன்னுள்ளும் புறமுமிருந்து
எழுந்தடங்குகிறது பேரலைகளின் சத்தத்தோடு
மௌனமாக

எங்கும் தன் வாசனையை நிரப்புகிறது
மரணம்
முடிவற்று
அதே தாளத்தோடும்
அதே கதியோடும்.

நடனம்

நம் காலடியிலிருந்து விரியும்
இப் பேரண்டப்பெருவெளியில்
நிரம்பிய வாசனை
கோள் மலர்களின் இதழூறிப் பெருகி வந்தது

ஒவ்வொரு கோளும் தம் உயிர்ச்சுனையிலிருந்து
ஊறும்
ஒவ்வொரு வாசனையோடு
இவ்வெளியை நிரப்புகின்றன.

நட்சத்திர மண்டலங்களின்
ஒளி பொருந்திய வெளியில்
ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு கண்
ஒவ்வொரு கண்ணும்
வெளிநிரப்பும் பேரொளி மண்டலம்

நீல ஒளி மிக்க
இம் மண்டலத்தில்
நிறங்களின் வாசனை
பேரண்ட வெளியாகிறது விரிந்து விரிந்தே

இந்தப் பேரண்ட நிகழ்வின்
முடிவிலாப்புள்ளியில்
முளைத்த விதி ரேகையோ
தன்னை நிகழ்த்துகிறது
திசைகள் கரைந்த பயண வெளியில்
வாசனை மண்டலத்தை

நீக்கமற்று நிறுத்தமற்று நிகழும்
பேரண்ட நிகழ்வில்
எல்லாவற்றுக்கும் அப்பால்
பூமி கொண்டிருக்கிறது தன் வாசனையை
இன்னொரு அதிசயமாய்

பூமியின் வாசனையோ
கோள்களின் வியப்பூட்டும் நிகழ்வு

உயிரின் ஒளித்தெறிப்பு
குளிரும் நீர்ப்படிகக் கருணை யூற்று
பேரதிசயமாய்
பிற கோள்ககளை விடவும்
பேரண்டப் பெருவெளியில்
பூமியின் வாசனை நிகழ்வு

வாசனை மிதக்கும் பெருவெளியில்
ஒரேயொரு கிரகத்தின் வாசனை
விலகி நீர்ப்படிகமாய் மிதக்கிறது
அதனுள்ளே உயிரும் உயிரும் மோதும் ஓசை

கேட்டதிர்கிறது
பிரபஞ்சம்

- கருணாகரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It