மாதத்தின் முதலாம்நாள் கன்னிப்பெண்ணின்
மார்பினைப்போல் விம்மிநிற்கும் சேப்பைத்தொட்டு
ஆதரவாய் தடவுகின்றேன் அம்மா அப்பா
அன்புமுகம் என்நினைவில் வந்துபோச்சு

காதவழி தான் நடந்தேன் போனமாசம்
கடன்தந்த கனகுமுகம் தோன்றலாச்சு
வாதமுற்ற எண்ணமுடன் வீதியோரம்
'பஸ்'ஸொன்றின் வருகைக்காய் காத்திருந்தேன்

தினம்குடித்து ஆடியாடி வீடுஏகும்
திக்குவாயர் எலிக்குஞ்சு தியாகுபோன்று...
சனமடுக்கி புகைகக்கி வந்த பஸ்ஸோ
சட்டென்று 'பிரேக்'கடிக்க உலுகுவந்தேன்..

பணம்நிறைந்த பையினிலே கையைவிட்டேன்
பத்தெடுத்தேன் பஸ்ஸினிலே ஏறிவிட்டேன்..
தொணதொணக்கும் கண்டக்டர் காதடைக்க
கரகரக்கும் பீக்கராகி கடந்து போனான்..

பத்துமிச்சம், பாவியென்னை பார்த்தும்கூட
'ஸ்ஸரட்ட யன்டமல்லி' என்றுபோனான்
முத்துமுத்தாய் சொட்டுகின்ற வியர்வை தன்னை
முடிந்தவரை நான்துடைத்து முக்கிநின்றேன்

செத்துவிட்ட அவள்நினைவு ஆங்கும்வந்து
செய்கவிதை எனமீண்டும் தொல்லை செய்தும்
கத்திக்கத்தி கத்திநெஞ்சில் வீசும் கனகர்
கடன்தந்த ஞாபகமே தொடரலாச்சு..

என்னருகில் ஒருகிழவி 'ஏன்டா மோனே
ஏன்காலில் மிரிக்கின்றாய் தள்ளு 'என்றாள்...
என்னசெய்ய? வியர்வைநாற்றம் பொறுமையோடு
'எங்கதள்ள இடமிருக்கா பொத்து'என்றேன்.

கண்ணருகில் காந்தம்பூட்டி நின்றபெண்ணோ
கஸ்ட்டநிலை உணர்ந்ததுபோல் இடம்கொடுத்தாள்...
பெண்ணவளில் சுவரிலுள்ள பல்லிபோன்று
பெருமூச்சு விட்டவாறு ஒட்டிக்கொண்டேன்..

என்னசுகம் 'திக்கதிக்' நெஞ்சடிக்க குருதியெங்கும்
எரிமலையின் குழம்புபொங்கி ஓடலாச்சு..
சின்னவன்நான் சனநெரிசல் உள்ளபஸ்ஸில்
சித்தமெங்கும் தீப்பிடிக்க சிக்கிநின்றேன்!.

அன்னமவள் 'பெயின்டடிச்ச' கூந்தல்வாசம்
அடிவயிற்றில் உருண்டையொன்றை உருட்டக்கண்டேன்..
கன்னம்வீங்கும் என்றுணர்ந்து கவலையோடு
காற்றுபோக இடம்கொடுத்து தள்ளிநின்றேன்.

எந்தவித சலனமற்ற அந்தப் பெண்ணோ..
ஏக்கமடன் பார்வைகளால் 'ஓகே' என்றாள்
அந்தவேளை கொழுந்துவிட்ட ஆசைத்தீயில்
அறிவுதன்னை போட்டெரித்து மோட்சம் கண்டேன்!

சிந்தையெங்கும் சிறுக்கியவள் விந்தைசெய்ய
சீர்கெட்ட எண்ணங்களே எழும்பலாச்சு
மந்தையாகி, நானுமங்கே பெற்றெடுத்த
தந்தைதாயை என்னைக்கூட மறந்திருந்தேன்...

'ரோசி'யென்று பெயருரைத்தாள் மேனியெங்கும்
'ரோஜாசென்டு' பூசிநெஞ்சை கிறங்கடித்தாள்!
தாசியவள் என்றறியா விடலைநானோ
தடுமாறி வீழ்ந்துவிட்டேன் நடந்ததென்ன..?

பேசுதன்னை பறிகொடுத்தேன் வாழ்க்கை என்னும்
பேருந்தில் வந்தபெண்ணை காணவில்லை...!
காசுதன்னை தொலைத்துவிட்ட கவலையோடும்
கவிதை யொன்றை வாங்கியேங்கி வீடுவந்தேன!!

- ஈழநிலா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It