பொன்மஞ்சளின் தீட்சண்யத்தோடு
இளஞ்சிவப்பு மலருரசிச் செல்லும்
மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இக்கணப்பொழுதில்
எனது கவிதைகளில்
சோகம் அழித்து,
காதலையும், கனவுகளையும்
அழகாய்ப் பதித்திட
அன்பாய்க் கட்டளையிடுகின்றாய்!

ஐரோப்பாவின் குளிர்ந்த தெருக்களில்
உலாவி நடக்கவும்,
சோம்பிப்போய்ப் படுக்கையில்
குலாவிக் கிடக்கவும்,
தேவதைகளின் தாலாட்டில்
உலகம் மறக்கவும்
உனக்கு வாய்த்திருக்கிறது!

நாளைக்கே
நானும் கொல்லப்படலாம்;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
விதி தன் ரேகையை - மிக
ஆழமாக வரைந்து செல்லும்
அக்கணத்திலும்...
உனது கோப்பைகளில் திரவங்கள்
ஊற்றி வழிந்திட,
தேவதைகள் இதழ்ரேகை
தீர்க்கமாய்ப் பதிந்திட,
மாலை வேளைகளுனக்குச்
சொர்க்கத்தை நினைவுறுத்தும்!

வாழ்க்கையுன்
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு!

உலகச் சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?
ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும்?

- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It