மாலைப் பொழுதிற்கென்றே
கடைத்தெருவும்
வைகை ஆறும்
எங்களுக்கு வாய்த்திருக்கிறது.
நேரம் வாய்க்காதவர்களுக்கு
திண்ணையாவது.

 

நெசவுக்கலை
கோவில் திருவிழாக்க‌ள்
நாளித‌ழ் நிக‌ழ்வுக‌ள் என்று
பேசிக்கொள்கிறோம்
சிரித்துக்கொள்கிறோம்
முறைத்துக்கொள்கிறோம்.

 

பாவு நீட்டிய‌ நாள‌ன்றோ
நோவு கொண்ட‌ நாள‌ன்றோ
இல்லை
தனிமை வேண்டிய‌ நாள‌ன்றோ
நில‌வுட‌ன் க‌தைக‌ள் பேசியவ‌ண்ண‌ம்
திண்ணையிலோ
வைகையிலோ
உறங்க‌வும் செய்கிறோம்.

 

தாத்தா கால‌த்திலும் இப்ப‌டித்தானாம்
அப்பா சொல்வார்.
இலைக‌ள் துளிர்த்து
வேர்க‌ள் நிலைத்ததான
வாழ்வு எம‌து.

 

- பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It