நெஞ்சமுழுக்க துயில் பாவும் மாயக்கண்ணாடியின்
வர்ணமிகு கதிர்களில் விரிகிறது
உன் கேசம் அலையும் முகம்
விழிகளில் அலையும்
மேகவிடுக்கின் மின்னலென தவிப்பு
எதன் பொருட்டும் சொல்லவியலா
அந்தகாரத்தின் கூரிருள்
பரப்பும் வெறுமையில்
நின்றாடுகிறது நினைவுப்பறவை
அதன் சிறகசைவில்
பிரபஞ்சத்தின் பட்டாம் பூச்சிகள்
கோடி துகள்களாக வலைய வருகிறது.
அத்தனை ரதங்களையும் பூட்டி
சூரியக் குதிரைகளை
விரல் சொடுக்கி ஏவி விடுகிறாய்
இன்றென் மெளனப்பிராந்தியத்தில்
விடைச் சொல்ல முடியா கேள்விகள்
உனது வார்த்தைகளாக
குதிரை குளம்பிகளில் எம்பி குதிக்கின்றன.
என்னை சிறையெடுத்து போகுதுன்
வார்த்தை மந்திரங்களில் மாய சுளி
அதில் அல்லாடும் எனது கைகள்
பினைக்கப்பட்டு ஆயிரம்
சவுக்கடிகளாய் விழுகிறது
உன் விழியசைவின் தகிப்பு
அபோதமாய் விழும் என் உடலை
நகங்களால் கீறி
வழியும் குருதியை
கூஜாக்களுக்குள் நிரப்புகிறாய்
மீண்டும் என் நினைவு அலைகளை பதித்துவிட்டு
என் அவயங்கள்
ஒவ்வொன்றாய் வெட்டி எறிகிறாய்
அதன் மரண கந்தத்தை
முகந்து கொண்டு எக்காளமிட்டு
சிரிக்கிறாய்..
உனக்காக இருந்து
எனையிழந்த காலத்தை நினைத்துப்பார்
உனது வார்த்தைகள் மரணவாயிலைத் தொடும்
கதவுகளிடையே வந்து விழுகிறது
பின்னர் மின்னெலன அசையும்
என் உயிரினை மெல்லப் பிரித்து
கயிறு பந்தென சுற்றி
உன் நெஞ்சக் கச்சையில் சொருகிவிடுகிறாய்
அத்தனை ஆவேசங்களும் கழித்து
இருக்கையில் அமர்ந்து
என் நினைவுகள் ஒவ்வொன்றாய்
தாழ்பானைகளில் இருந்து கொட்டுகிறாய்
அதன் வர்ணமுகங்களைப் பார்த்து
ரசித்து விழிநீர் கரைய
அழுது விடுகிறாய்.
அன்பே நீ எங்கிருக்கிறாய்
உடைந்து சிதறும்
அவள் வார்த்தைகளில் பட்டு
பட்டாம்பூச்சிகள் நடுங்கி பறக்கின்றன
அசைத்தலில் வலியில்.

- நட்சத்திரவாசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It