மாயச்சிலந்தி பின்னும்
மெல்லிய பிசின் வலையில்
இரையாக சிறைப்பட்டுக் கிடக்கும்
சிறு விட்டில் பூச்சிகளை கவ்விப்போகிறது
மூலை வாழும் பல்லி ஒன்று

பிறகு என்ன கருணை கூர்ந்ததோ
பிடியை சற்று நழுவவிட
பொத்தென்று விழுகின்றன
இதயங்கள் தரைமீது

என் தோளில் கை போட்டபடி
இணையாய் நடந்து வரும் என் பிரியசகியே

வல்லமை கொண்ட ஆகாயப் பருந்து ஒன்று
எதிர்ப்பற்ற கோழிக்குஞ்சு என
என்னை தன் வலிய அலகினால்
கொத்தி தூக்கிச் செல்லும் போது
திக் பிரமையுற்று சிலையென
நின்று கொண்டிருக்கும் நீ
எவ்விதம் என்னைப் பிரிவாய் சொல்?

மனங்களில் சிறுகுழிகள் வெட்டி
பணம் தன்னைப் புதைத்து விட்டு
அடுத்த வேட்டைக்குப் போகும்
ஆதி மனிதர்கள் மத்தியில்
மயானத்தில் பட்டுப்போன துளசிச் செடிக்கு
தண்ணீர் மொண்டு ஊற்றும்
உன் கருணைக்கு
நான் என்ன பதில் தரட்டும் மனதார?

என்னை வாரி சுருட்டி
ஒரு மயிலிறகாக்கி
உன் உள்ளங்கைகளில்
வைத்து விடவா?

கடவுள் என்னும் ஒரு பெரும் சொல்லை
உருவமற்ற பேதமற்ற
பாலினமற்ற
முலைக்காம்பில் துளிர்க்கும்
ஒரு துளி தாய்ப்பாலென
மாற்றி விடும் உன் இதயம் தன்னில்
நான் எவ்விதம் நிறைவது சொல்?

நானே கசிந்து நதியாகி
பூக்களாய் நடந்து வரும்
உன் பாதங்களைக் கழுவி
முத்தமிட்டு
பின் பூமிக்குள் கரைந்தோடி
மறைவதைத் தவிர

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.