1. அழைப்பிதழ் தேவையில்லை
தண்டோரா வேண்டாம்.
ஒலிபெருக்கிப் பாட்டு எதற்கு?
சீரியல் பல்பு தோரணம்,
வி.ஐ.பி வரவு
எதுவும் தேவையில்லை.

மரம் அறுக்கையில்
சப்தமின்றியே
பெருங்கூட்டம் கூடும்!

தேனீர் விருந்து வைத்தாலும்
மரம் நடுவிழாவுக்கு
நாலு பேருக்கு மேல் கூடுவதில்லை

குழி எடுப்பவர்,
தண்ணீர் ஊற்றுபவர்,
செடி நடுபவர்,
போட்டோ எடுப்பவர்!

2. கையை நீட்டும் மரம்

தன்னை அடிக்கப் போவது
தெரியாமலே,
முதல் அடிக்காக
கை நீட்டும் குழந்தையைப் போலவே

தன்னை அறுக்க வருவதைத்
தெரியாமலே
அமைதியாய் கிளையை
நீட்டுகிறது மரம்.

3. மரமேசையின் சிரிப்பு

வெட்டப்பட்ட மரத்திற்காக
இரங்கற்பா எழுதினேன்.
வாசித்தபோது
கண்கள் கலங்கின.

"டேய், நீலிக்கண்ணீர் வடிக்காதடா!"
என்று சிரித்தது
கையை ஊன்றிய
மரமேசை!

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.