old_lady_320ரெட்டைக்கிளவி அறியும்முன்னே
நானறிந்த ஓர் கிழவி
அன்பாலே பேரழகி
வெள்ளந்தி சிரிப்பிலே
அன்றலர்ந்த பூவழகி

ஏட்டுப்பாடம் படிக்கும்முன்னே
காட்டுப்பாடம் படிக்கவச்சா
மண்ணுவளம் இல்லையின்னா
மனுசபய இல்லையின்னு
மண்டையில ஏத்திவச்சா

சண்டையில வந்துநின்ன
கலப்புசாதி காதலைத்தான்
ஆணும் பெண்ணும் ஏத்துகிட்டா
சாதின்னு ஒண்ணுமில்லை
சாதின்னு பார்த்துவிட்டா
சமாதிக்கு மண்ணுமில்லைன்னு
சமத்துவம் பேசிநின்னா
பெரியாச்சி பெருங்கிழவி

மழைபெஞ்சு நின்னுதின்னா
மரத்துக்கெல்லாம் பொங்கல்வைப்பா
பூவுக்கெல்லாம் பூவைப்பா
எங்காத்தா பூவாத்தா

குலசாமி கதைசொல்லி
குழந்தைகள தூங்கவைப்பா
நிலாவைக் கூட்டிவந்து
என் கனவில் தூங்கவைப்பா

ஊரழகி உலகழகி வேண்டாண்டி
என் தங்கம்…
பிரபஞ்ச பேரழகி பேரனுக்கு
கட்டப்போறன்னு பூரிச்சுக்கிடந்தா
ஊர்கொஞ்சும் பழங்கிழவி

நான் கப்பலேறிப் படிக்கப்போக
காடுவித்து காசுதந்தா
நான் காசோட வருகையில
எமன் கயித்தோட வந்துநின்னான்

நீ சொர்க்கவாசல் தட்டத்தான்
நெய்ப்பந்தம் நான் வைத்தேன்
என் பந்தமாக நீயிருந்து
என் வாழ்விற்கு வாசல் வைத்தாய்

நான் பார்த்த பெண்களிலே
நீதானே பேரழகி
என் குழந்தைக்கு கதைசொல்ல
இனி யார்வருவார் சொல் கிழவி?

-          ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It