காலை மாலை மதியம் இரவு என
சூட்டிக் கொண்ட
சுதந்திரக் கால்களோடு
விரிந்து கொண்ட
வேங்கை கைகளோடு
சோளக்காட்டு பொம்மையாக நிற்பது
காட்டுக்காரனின்
காணாமல் போன கடைசிப் பையன்
ஊமையன்தான்னு ஊருக்குள் பேச்சு.

*
அரைப் பக்கத்தை அடித்து விட்டு
கால் பக்கம் மிஞ்சியவைகளைத் தான்
மறுபக்கத்துக்கு மாற்றி விடுகிறேன்
கீழ்ப் பக்கம் மிச்சமிருக்கும்
வெறுமையைத் தான்
கையெழுத்திட்டு
முழுப்பக்கம் ஆக்கி விடுகிறேன்.

*
அதிகாலைக் கனவை அள்ளி
குப்பையில் தள்ளி விட்டு
வாசல் பெருக்கி
கோலமிட்டவளுக்கு
புள்ளிகள் போதவில்லை
பிறகு
குடித்த தேநீரில்
சர்க்கரையும் போதவில்லை

- கவிஜி

Pin It