இலக்கு
******

இலக்குகள்
தீர்மானிக்கின்றன
வாழ்க்கைப் பயணத்தை...
நத்தைக்கு
சாலையைக் கடத்தலும்
பசியோடிருக்கும்
ஏழைக்கு பசியின்றி
நாளைக் கடத்தலும்
பெரும் இலக்கு

அலைவரிசை
************

கடற்கரையில்
பாதச்சுவடுகளால்
தொடர்கோலமிட்டுச்
செல்கிறாள் குட்டிதேவதை
பாதத்தைத் தழுவிட
வந்த ஆசையலைகள்
கோலத்தைக் கலைக்க
மனமின்றி
திரும்பிச் செல்கின்றன
ஏக்கத்துடன்

அலைவரிசையறிந்த
சிறுமி
ஓடிச் சென்று
கால் நனைக்கிறாள்
மகிழ்ச்சியில்
ஆர்ப்பரிக்கிறது அலை

நகரத்தில் மழை
*************

மழை தொடங்குகிறது
பரபரப்பாகிறது நகர சாலை
விரித்து வைத்த
குடையொன்று
காற்றில் நகர்ந்து
சாலையில் இறங்கி
மழையில் நனைகிறது
ஓடி வந்து குடையை
எடுத்துக் கொண்டு
ஓடுகிறார் ஒருவர்
மழையை இரசிக்காது
மனக்குடையை
விரித்தபடி
ஒதுங்கி நிற்கின்றனர்
மடைமக்கள்
அதிகோபத்தில்
அதிர்கிறது மழை
இடி என காதைப்
பொத்திக் கொள்கிறார்கள்

- பா.சிவகுமார்

Pin It