ஓடு வேய்ந்த வீட்டைக்
காணும் போதெல்லாம் தோன்றும்
உயிர் வேய்ந்த வீடு

*
மழை நின்ற பிறகு
கோயிலைச் சுற்றிய கால்களில்
புதுப் பாதம்

*
தெப்பக்குளத்துக்குள்
படிப்படியாய் இறங்குகின்றன
வெப்ப தகிப்புகள்

*
எல்லாம் தெரியும் என்கிறவனை
உற்றுப் பார்
காற்றறையும்

*
மனிதனை கடவுளிடம் சேர்ப்பது
பூசாரிகள் அல்ல
பிச்சைக்காரர்கள்

*
நீ எட்டிப் பார்க்கும் அழகுக்காகவே
கிட்ட வரத் தயங்கும்
தெரு முக்கு ஒலிப்பான் நான்

*
நான் வழிப்போக்கனாக இருந்திருக்கலாம்
உன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து
உன் கையால் நீர் அருந்தியிருப்பேன்

*
மீன்களுக்கு தான் தூண்டிலிட்டு
அமர்ந்திருக்கிறாய்
மீன்காரன் எனக்கோ தோகையிட்டு

*
தேவைக்கு வரும்
தேவதைகள் வேண்டாம்
தினத்தை பகிரும் மனுஷி நீ போதும்

*
இத்தனை அழகை வைத்துக் கொண்டு
என்ன செய்வதாக உத்தேசம்
புத்தனை

- கவிஜி

Pin It