பத்து விரல்களிலும்
மோதிரம் மாட்டித் திரிந்த
அது ஒரு குடலூதும் காலம்

*
ஒரு கொத்து கவியோசை
கத்தும்
இக்குயிலோசை

*
எழுதி காட்ட முடியாமல் தான்
எழுந்து நின்று
காட்டுகிறதோ மலை

*
இமய மலையை
சுட்டிக் காட்டும்
உன் இமையிலும் மலை

*
பெரும்பாலைய தேவதைகள்
மிகு
புனைவுகள் தான்

*
சில போது காதலிகள்
நல்ல தோழிகளை
அடையாளம் காட்டி விடுகிறார்கள்

*
சமர் போலத் தான் தெரியும்
அருகிப் பார்
பாறை நீர் தழுவல் அது

*
நம்மூர் மாரியம்மனுக்கு மட்டுமா
கல்கத்தா காளிக்கும் தான்
உன் சாயல்

*
வரிசை தப்பி அமர்ந்திருக்கும்
காக்கை
ஊருக்குப் புதுசு

*
கொடுத்த பத்து முத்தத்தில்
நான்கு
கெட்ட வார்த்தை

*
ஒரு கவிதை எழுதி
நாளை தொடங்கு
அர்த்தமுள்ள வாழ்வு இன்றும்

- கவிஜி

Pin It