நடந்தே தேய்ந்த
ஒற்றையடிப் பாதைகளில்
முளைக்க மறுத்த
புற்களிடம்
சில கேள்விகள்.

மறந்தே போனதா?
இல்லை
மறுத்து விட்டீர்களா?
ஏன் இந்த
புறக்கணிப்பு?

வழி சமைத்துத் தந்த
மண்ணோடு முரணா?
இல்லை
அழுந்த மிதிக்கும்
பாதங்களுக்குப் பயந்தா?

நீங்கள் சுமக்கும்
பனித்துளிகள்.
மிதிபட மிதிபட
மண்ணில் குழைந்த
வேர்களின்
கல்லறைக்குக்
கண்ணீர் அஞ்சலியா?

புல்வெளியைக்
கிழித்து
பாகம் பிரித்தது யார்?

கால்தடங்கள்
காலத்தின்
சரித்திர ஏடுகள்
கொஞ்சம்
நெருங்கி வந்து
வாசியுங்கள்.

- முனைவர் நா.இளங்கோதமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி - 8.

Pin It