நீ நான் சிரித்து
அடங்குகையில்
சிலிர்த்து உதிர்க்கும்
கண்ணீர்த்துளி!

மனம் கனத்துப் போன
இரவொன்றில் என்
தலை தாங்கும்
தலையணை!

அதி வேகமாய்
எனைக் கடந்து செல்லும்
யுவதி முணுமுணுக்கிற
இளையராஜாவின் பாடல்!

வேனிற் காலத்தின்
வெம்மை தணிக்க
வந்த கோடைமழை
கிளர்த்தும் மண்வாசனை!

நீச்சல்
தெரியா காலத்தில்
தண்ணீர் குடித்து
உப்பிப் பெருகிய பொழுதின்
உயிர் மூச்சு!

இலையுதிர் காலம்
முடிந்ததும்
முதலில் துளிர்க்கும்
இளந்தளிர்!

கல்யாணப் பெண்ணவளின்
கன்னஞ்சிவக்கும்
வெட்கத்து
இளஞ்சிவப்பு!

மாதவிடாய் நேரத்து
பற்றிக் கொள்ள
விரும்புகிற
உள்ளங்கை இளஞ்சூடு!

பௌர்ணமி காலத்து
முற்றத்து
பூர்ணிமை!

சிந்தை கலைந்த
நேரத்து நான்
சேகரிக்க விரும்புகிற
நினைவுத்தாழி!

- இசைமலர்

Pin It