ஓரிரு சிட்டிகை
இதற்கடையோரம் வழியும் புன்னகையை
முதலில் இட்டுத்தான் பழக்கமெனக்கு

என் பார்வையை
ஊற்றிய மறுநொடியில்
பொங்குகிறது பார்
ஆதுரத்தின் நிறம்

தேவைக்கேற்ப
உன் பின்னங்கழுத்தின்
வசீகரத்தை
சேர்த்துக் கொள்ளத்தானே
திரும்பி நிற்கிறாய்

ஆற்றப் பொறுக்காத சூட்டோடு
அள்ளிப் பருகுவது தான்
பணி முடித்து வரும்
களைப்பாலான பொழுதுக்கு
இதமாக இருக்கிறது

ஆவி பறக்கும் அழகை
உதடு குவித்து ஊதுகிறேன்

நீ என்னவோ
கோப்பையில் நிரப்பிக் கொண்டுவந்து
தேநீர் என நீட்டுகிறாய்.

- ந.சிவநேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.