என்னென்னவோ கத்தி விட்டு
அந்நிய பாஷை என்கிறான்
ஆஹா ஆமா என ஒத்து ஊதுகிறீர்கள்
அடித்தொண்டையில் அண்டா மூடும்
பேச்சுக்கள் அவை
அவையனைத்தும் தொலைக்காட்சியில் என்ற
உள்ளுணர்வு கூட உங்களுக்கு இல்லை
முக்காடிட்டு மண்டியிட்டுக் கிடப்பது
அடிமைத்தனம் என்கிறேன்
தோசையில் விஷம் வைக்கப் பார்க்கிறீர்கள்
உங்களின் வெட்ட வெளிக்கும்
ஜோடான் நதிக்கும் தொடர்பில்லை என்கிறேன்
கிணற்றில் தூக்கி வீசி விடுவதாக மிரட்டுகிறீர்கள்
ஒரு காலத்தில் நடந்து வந்த பாஸ்டரன்
இப்போது மாடி வீட்டிலிருந்து காரில் வருவது
எப்படி என்ற கேள்வி உங்களுக்கு ஏன் இல்லை
அப்போதிருந்து இப்போது வரை எப்போதும்
நீங்கள் பஸ்க்கு காத்திருப்பது பற்றியும்
அதே குட்டியூண்டு வீட்டில் வசிப்பது குறித்தும்
ஒரு குடம் தண்ணீருக்கு
நாய் சண்டை போடுவது குறித்தும்
ஏன் சிந்தனை இல்லை
நல்ல காரியமோ கெட்ட காரியமோ
ஏன் எப்போதும் அவர்கள் முன்
கூனி குறுகியே நிற்கிறீர்கள்
காணிக்கை கொடுத்தே காணாமல்
போவதிலிருக்கும்
உங்கள் சோம்பேறித்தன ஆனந்தம் புரிகிறது
கை முட்டி வலித்தால் கடவுள் எண்ணெய் பூசுவதும்
கண்ணுக்குள் வலி என்றால் ஐ ஆஸ்பத்திரி செல்வதும்
உங்கள் இறை நம்பிக்கையின் அபாரம்
பாஸ்டரன் திட்டுவான் என பொட்டற்று வளையலற்று
வாரம் ஒருமுறை வெள்ளுடை தரித்து திரிவோரே
உங்களில் பெரும்பாலானோருக்கு வீடு இல்லை
தனித்த வாகனம் இல்லை
உங்கள் பிள்ளைகள் படிக்க வசதி இல்லை
உங்களுக்கென்று தனித்த சுடுகாடு கூட இல்லை
என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா...!

- கவிஜி

Pin It