என் மேனியைத் தழுவிக் கொள்ளும் ஆடைகள் அச்சத்தில்
கண்களை மூடிக் கொண்டே இருக்கின்றன
பேச எத்தனிக்கும் போதெல்லாம்
குரல்நாண்கள் அடைபட்டுப் போய்
சொல்ல வந்த வார்த்தைகள் நாவினை
ஊடுருவாவண்ணம் இடைநிற்கிறது
வாயிற்படியைத் தாண்டி
இப்பரந்த பெருவெளியில்
எனக்கான உரையாடல்கள்
யாருடன் என்பது
எவரோ ஒருவரால்
நிர்ணயம் செய்யப்படுகிறது
கைப்பேசியில்
வரும் அழைப்புகளெல்லாம்
பிறகு பேசுவதாய்ச் சொல்லி புறந்தள்ளப்படுகிறது
என்னுடைய சுதந்திரமும்
எனக்கான ஆசைகளும்
முகமறியாத நான்கு பேரால்
முடங்கிப்போய் கிடக்கிறது
என்னுடைய ஒழுக்கங்களும் நேர்மைகளும்
இதுவரை நான் சந்தித்திராத
புறம் கூறும் மனிதர்களிடம்
அடகு வைக்கப்படுகிறது.
நீங்கள் செல்லும் பாதைகளில்
அசிங்கங்கள் ஆயிரம் இருக்கும்போது
அடுத்தவன் பாதையை அளந்து பார்ப்பது ஏன்?
உங்கள் எண்ணங்களில்
அழுக்குகளை விதைத்து வைத்துக்கொண்டு
மற்றவரின் மகிழ்ச்சியை
அறுவடை செய்வது ஏன்?
போதும் இத்துடன்
நாவுகளைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்
நிலைக்கண்ணாடி முன்
நீங்கள் போய் நின்றால்
உங்கள் முகத்திரை கிழிக்கப்படும்
ஏளனம் செய்த வாய்திறந்தால்
புழுவும் பூச்சியும் நெளிந்தோடும்
எவரோ ஒருவரால் உண்டாக்கப்பட்ட நாலு பேர்களை
என்றாவதொரு நாள்
யாரோ ஒருவர் அடித்துக் கொள்ளும் நாள் வரும்...

- எஸ்தர்

Pin It