உன் பயணங்களில்
உனக்கு முன்னால்
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போகலாம்...
சாரல்மழை வந்து
உந்தன்
தலை நனைக்கலாம்...
சிந்தும் புன்னகையோடு
தாய்விரல் பிடித்த
மழலை
தளிர் நடையிடலாம்...
உயிர்வற்றி
காய்ந்த உடலாய்
முன்னொருநாள்
வாலாட்டிய தெருநாய் வாய்பிளந்திருக்கலாம்...
சத்தமில்லா விரைவு இரயில்
சன்னல் மரங்களை
பின்னோக்கி நகர்த்தலாம்...
என் சாயலொத்த ஒருத்தி உன் இருக்கைக்கு எதிர் அமரலாம்...
அத்தனையும்
கவிதையாய் மாற்றத் தெரிகிறது
உனக்கு.,
இப்போது என் வினாவெல்லாம்
யாதொன்றிலும்
நினைவுக்கு வாராத
என் நினைவுகளை
எங்கே தொலைத்தாய்?
என்பது மட்டும்தான்.
- கார்த்திகா