ஒரு காதல் கவிதையை யோசித்தபடி

வேகமாய் நடந்துகொண்டிருக்கிறேன்

காந்தி, தெரசா

ஈரோடு ராமசாமி,

சலீம் அலி, ஜிம் கார்பெட்

கார்ல் மார்க்ஸ், சேகுவேரா

என மங்கிய படங்களின்

பட்டியல்தாங்கிய அருங்காட்சியகத்தை

கடந்து வந்து கொண்டிருக்கிறேன்.

ரயில் நிலையத்தின் முன் வந்துவிட்டேன்

பிரமாண்டமான போஸ்டரில்

இதயவடிவ சிவப்பு பலூன்களை

நெஞ்சோடு அணைத்தபடி

காதலர்தினம் கொண்டாட அழைக்கிறார்கள்

விளம்பர அழகிகள்!

 

கவிதை ஓரளவு வந்துவிட்டது

உனக்காக எழுதிவைத்த கவிதையொன்று

இன்னும் உறங்குகிறது வெள்ளைப் படுக்கையில்

சேமித்து வைத்த முத்தமெல்லாம்

ஏங்கிப்போய் வீங்கவைக்கின்றன உதடுகளை

உன்னோடு உரையாடவென சேர்த்துவைத்த

வார்த்தைகள் எல்லாம்

நாவினடியில் இளைப்பாறுகின்றன

நதியடியின் கூழாங்கற்களாய்...

 

உனக்காக காத்திருக்கும் இந்த ரயில் நிலையத்தில்

காதல் என்பது ஒருபொருட்சொல் அல்ல

என்ற பெருத்த ஊதலுக்குப்பின்

மிகப்பெருமூச்சுடன் வந்து நிற்கிறது

புராதன ரயில் ஒன்று

 

- ஜனா கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It