அசைந்தாடும் இருட்டில்
எனது புன்னகையை
கை தட்டிப் பார்க்கும் ஜன்னலுக்கு
அது போதாததாக இருக்கிறது

யார் என்று அறிய முற்படும்
என் முதுகுப் பக்கத்தை
நானும் ரகசியமாய் விரும்புகிறேன்
ஜன்னல் அசைந்து புன்னகைக்கும்
சூட்சுமம் அது

நான் நடந்து கொண்டே பறக்கையில்
வானம் இடித்து விளையாடுவதை
ஜன்னல் இப்போது கைகள் நீட்டி
பறித்துக் கொள்ளும்

செத்த யானையாகத் தொங்கும்
கொடி நுழைந்து வருகையில்
மின்னலுக்கு விசில் அடிக்கும் ஜன்னலில்
கம்பி கம்பியாய்
எனைக் காணும் ஆவல்

அதிகபட்ச அவசரத்தோடு
ஆடை களைந்து நிற்கும் ஜன்னல்
நன்றாகத் தானிருக்கும்
ஆனாலும் திரும்பாத நான்
நிர்வாணத்தை தலைக்குப் பின்னிருக்கும்
வட்டத்தில் விட்டு விட்டு நகர்கிறேன்

முழுதாகத் திறந்திருக்கும் ஜன்னல் வழியே
இப்போது
உலகையே சுருட்டிக் கொள்ளும்
மூக்குத்தி ஒளி எட்டிப் பார்க்கிறது

- கவிஜி

Pin It