கூடடைந்த பறவைகள்
இட நெருக்கடியால்
சிறு சிறகசைப்பும் முடியாமல்…

சேமிப்பை அறியாத
பறவைகளுக்குக்
கூடடைப்பு
கொடும் சாபம்
குஞ்சுகளுக்கும் சேர்த்து
நேற்றைய உழைப்பில்
நேற்றைய உணவு
இன்றைய பசிக்கு…

நாற்றிசையும் சூழ்ந்த
நச்சுப் பாம்புகள்
கிளைதோறும்…

முட்டைகள்
குஞ்சுகள்
பறவைகள்
எவையும் விலக்கல்ல
கண்ணில் பட்டது
கபளீகரம்
பாம்புகளின் பெருமூச்சு
பதைபதைக்கச் செய்கிறது

உயிரச்சம்
கூடடங்கச் சொன்னாலும்
குஞ்சுகளின் பசிக்குரலும்
இருள்கவ்வும் விழிபதைப்பும்
இருப்பைச் சிதைக்கிறது.

வெறுங்கூட்டைக்
கொத்திக் கொத்தி
முனை மழுங்கும்
கூர்அலகு…

வாட்டமுறும்
மனம்சலிக்கக்
குரெலெடுத்துக்
கூவிடவும் பேரச்சம்
வட்டமிடும் வல்லூறு

நச்சுப் பாம்புகளின்
அச்சமிலா வல்லூறுகளின்
நாளைய பசிக்கு
நாம் இரையாவதா?

கூடடைந்த
பறவைகளின்
குமுறல் செவியேறவில்லை
குரெலெடுக்கும் குஞ்சுகளின்
கூப்பாடும் கேட்கவில்லை.

நச்சுப் பாம்புகட்கோ…
நாடிவரும் வல்லூறுக்கோ…
நலிவுதரும் பசிக்கோ…

நாளை விடியட்டும்..

- மலையருவி

Pin It