கூட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது
மாறி மாறி பேசிக் கொண்டேயிருந்தோம்
ஞாயிறு மாலை உதிர்ந்து கொண்டிருந்தது
தூங்கி வழிந்த நண்பன் மீது கோபம் வந்தது
கூட்டம் முடியட்டும் இருக்குடா உனக்கு
கண்களால் முறைத்தேன் மனதுக்குள் திட்டினேன்
வீடு திரும்புகையில் மூஞ்சை திருப்பிக் கொண்டேன்
சிரித்துக் கொண்டே நண்பன் சொன்னான்
மேடையில் அமர்ந்திருப்பது போல அல்ல
முன் வரிசையில் அமர்ந்திருப்பது

*

காதலிக்கவும் விடல
கல்யாணம் பண்ணியும் வைக்கல
சாதி சாமி ஜாதம் பொருத்தம் தோஷம்
மானம் மரியாதை இழவு கலரு...ன்னு
எல்லா வகையிலும் போட்டுத் தாக்கி
வயது 35 ஆகி விட்டது
வெட்கத்தை விட்டு டில்டோ வாங்கிச்
செல்பவளிடம் கேட்கவோ கிண்டலுக்கோ
என்னிடம் எதுவும் இல்லை
எல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது

*
விருப்பக் குறியீடுகள் கொம்பு முளைக்கச் செய்யும்
பகிர்தல்கள் வம்பு வளர்க்கச் செய்யும்
கொண்டியிடுதல் குறுக்கு சிந்தனை மலர்த்தும்
பின்னூட்டங்கள் புத்தி பேதலிக்க வைக்கும்
பெண்ணுக்கு மீசை கூட முளைக்கச் செய்யும்
ஆண் மார்பு முளைத்து திரிவதும் எளிது
ஆசை அடங்காத அரச மரம் முகநூலில் இருக்கிறது
கவனம்......!

- கவிஜி

Pin It