மிகச் சிறியதாய்
இருக்கிறது அந்த ஒளி
அது விழுந்த மனத்தினிடையே
தெரியும் துண்டு வானுக்கு
நித்திரையில்லை
நிஜம் எதுவோ என
அவ்வொளியை கையிலடைத்து
நடக்கிறேன்
நான் ஓடியதாக சொன்னவர்களைப்
பார்க்கையில்
பறந்ததாக சொன்னார்கள்
திரும்பி என்னையே பார்த்த பிறகு
சரி எனப்பட்டது பறந்ததும்
இளைப்பாறலற்ற என்னுடல் மீது
என் சுமை
தாங்கொணா அமைதியாக
பூமியை சுமந்தபடி செல்வதாக
தொடுவானம் மினுமினுக்கிறது
அண்ணாந்து பார்க்கிறேன்
தலைகுனிந்து பார்த்தது போல
பிரபஞ்சத் தோகை துண்டு வானத்தை
விரிக்கிறது
பயணக் களைப்பில் வெகு தூரத்தில்
புள்ளியாய்
அசைய ஆரம்பிக்கிறேன்
உங்களுக்கு வானில் இன்னொரு
நட்சத்திரம்

- கவிஜி

Pin It