நீதியை
விற்கத் தெரிந்தவர்கள்
அதற்கான விலையை
பதவி நாற்காலியாக
பெற்றுக் கொள்கிறார்கள்.

பாரத மாதா
மனபாரம் தாங்காமல்
தூக்கில் தொங்குகிறாள்.

நாடாளுமன்றத்தின்
மைய மண்டபத்தில்
அவளின் உடல்
அடையாளம் தெரியாமல்
புதைக்கப்படுகிறது.

அவளுக்கான
இரங்கல் பாடல்
இரகசியமாக இசைக்கப்படுகிறது.

தேசிய கீதத்தின்
பெரும் சப்தத்தில்
அவளுக்கான
இரங்கல் பாடல்
எவர் செவிக்கும் எட்டவில்லை.

போலி தேசபக்தர்களின் ஆட்சியில்
உண்மையான தேசபக்தர்களின்
நாவுகள் பறிக்கப்பட்டன.

அநீதிக்கு ஆதரவாக
சாட்சியம் சொல்ல
நல்வாய்ப்பாக
விழிகள் பிடுங்கப் பட்டன.

சுதந்திரம்
காக்கப்பட வேண்டும் என்று
ஓயாமல் உரைப்பவர்கள்

சித்ரவதைக்கு ஆளாகாமல்
தாங்களாகவே
உயிரை விட்டுவிடும்
உயரிய சுதந்திரம்
உறுதிப்படுத்தப் பட்டது

ஜனநாயகத்தைக்
காப்பாற்ற இனியும்
மக்கள் தேவையில்லை.

ஆட்சியாளர்களின் எதிர்காலத்தைத்
தீர்மானிக்க
வாக்குப் பதிவு எந்திரங்களே
போதுமானது.

- அமீர் அப்பாஸ்

Pin It