வட்டமிட்டு துளையிட்ட
நேர்த்தியில்
மானுடக் குளறுபடிகள்

ஆழ்மன தவிப்பின் குறியீடென
எட்டிப் பார்க்கும் பெருமூச்சு

நரகம் வேர் பிடித்து பிழை ஆனது
அரூப நிகழ்வென துணைக்கு
கால் இழுத்தது

எழுதவியலா சொற்றொடரின் சூல்
அழுது புலம்பும் அரட்டித் ததும்பும்
செய்வதறியாது விசும்பும் குரல் வழியே
நல்வரிகள் தேடுகிறோம்

சதுரம் வட்டமாகி வட்டம் புள்ளியாக
நடுவே சொல் ஒன்றின் தவிப்பு

நகர முடியாத இறுக்கத்தில்
வார்த்தைகள் ரத்தம் பூசி படபடக்கின்றன

நம்பும்படியான இடைவெளியில்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே
இவ்வெள்ளைக் காகிதம்

எதுவும் எழுதப்படாத காகிதத்தில்
இவ்வுலகம் வழக்கம் போல
எழுதிக் கொண்டிருக்கிறது
மூடப்படாத ஆழ் துளை கிணறுக்கு
மீண்டும் ஒரு கவிதை

- கவிஜி

Pin It