பின்பக்கமாகத் திரும்பி அமர்ந்திருப்பவளின்
நிர்வாண ஓவியத்தில்
எப்போதுமே தெரிவதில்லை முலைகள்

துருத்திக் கொண்டிருக்கும் முதுகெலும்புக்குள்
ஆர்வமுடன் துழாவும் கண்கள்
நூறு முறை ஆயிரம் முறை
இல்லாத முலைகளின் அளவுகளை
வரைந்து கொண்டே இருக்கின்றன.

அவள்
இடுப்புக்குக் கீழே
மணலுக்குள் புதைந்திருக்கிறது
எலிகளாக மாறும் விரல்கள்
கொறித்துக் கொண்டே இருக்கின்றன
நுண்சதை வண்ணங்களை.

முன்பக்கத்தை
வேடிக்கை பார்க்கும் சூரிய ஒளிக்கு
எந்தவிதக் கற்பனையும்
வரப்போவதில்லை.
தங்கமென மின்னும் உடலில்
ஒரு நீர்த்துளியாக உருண்டு சுற்றி வர
தவமிருக்கும் மணற்துகள்கள்
வயிற்றுக்கு அடியில்
வெறுமனே அமர்ந்திருக்கின்றன.

அவளின்
தலை குனிந்திருப்பது
கைகள் ஒடுங்கியிருப்பது
இடுப்பை விரித்திருப்பது
எல்லாமும் உங்களுக்கு
புணர்ச்சிக்கான அழைப்பாகத் தோன்றுகிறது

ஒளியைப் போல
பயணித்துக் கொண்டே இருக்கும்
முடிவற்ற அவளது முன்பக்கம்
தொடமுடியாத இருளால்
நிரம்பியிருக்கிறது.

ஒரு ஆப்பிளை உருட்டி
அவளைத் திரும்புமாறு அழைக்கிறீர்கள்
முன்பக்கத்திற்காகக் கெஞ்சி அழுகிறீர்கள்.

திரும்பாமல்
அவ்வளவு பிடிவாதமாக
என்னதான் செய்கிறாள்

ஒருவேளை
இறந்து கொண்டிருக்கும் அவளது உடலை
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறாளோ.

மாடலிங் மனிதன்
•••••••••••••••••••••••••

மாடலிங் மனிதன் நடந்து வருகிறான்
தலையிலிருந்து கழற்றி வைக்கப்பட்ட உயிர்
ஒப்பனை அறையில் வெகுநேரமாக
அவனைத் தேடிக் கொண்டிருக்கிறது.

உள்ளாடைக்கான மாடலாகியிருக்கும் உடலை
கேமராவுக்காக பளபளப்பாக்குகிறார்கள்
அவனுக்கு வெட்கமாக இருக்கிறது.

சிகையலங்காரம் செய்து முடித்தவள்
மார்புக் காம்புகளைத் திருகிக் கூர்தீட்டுகிறாள்
ஒவ்வொரு தசையும் பொங்க வேண்டும்
கூட்டத்தில் உன்னைப் பார்க்கும் கண்களை
ஒருபோதும் நீ பார்க்கக் கூடாது என்கிறாள்.

நீ ஒரு உள்ளாடைக்கான மாடல்
நடந்து செல்லும் போது
உடல் தூங்கக் கூடாது என்கிறான்
கணிணியில் ஆடையை வடிவமைத்தவன்.

மாடலிங் மனிதனுக்கு
எல்லாமும் விசித்திரமாக இருக்கிறது
சூழலைப் புரிந்து கொள்ளாத உடலைத்
தட்டித் தட்டி சோர்ந்து திட்டு வாங்கியபடியே
ஓய்வறைக்குச் செல்கிறான்.

அவன் காதில் ரகசியமாக
ஓர் உபாயம் சொல்லப்படுகிறது
"நினைவில் யாரையாவது
புணர்ந்து கொண்டே நடந்து செல்
உடல் எழுச்சியுடன் இருக்கும்
பார்வையாளர்கள் அசந்து போவார்கள்."

நேர்க்கோட்டில் பொங்கி
துடிப்புகளாக நகர்ந்து செல்கிறது
மேற்கத்திய இசை.
சிலையாகி நடந்து செல்லும்
மாடலிங் மனிதனைப் பார்த்து
பொங்கும் தங்களின் விரல்களைச்
ஆடைகளுக்குள் அழுத்துகிறார்கள்
பார்வையாளர்கள்.

வாவ் !
என்ற பேரொலி எழுந்து
கைத்தட்டலுடன் திரும்பும் வளைவில்
திடீரென நின்று விடுகிறது
நினைவில் புணர்தல்.

சுருங்கும் உடல் பார்த்ததும்
ஓடி வந்து கோட் மாட்டுகிறார்கள்.
எந்த வித சப்தமுமின்றி
அடுத்த அரங்கில்
குளிர்கால ஆடைக்கான காட்சிக்காக
நகர்ந்து செல்கிறான்
மாடலிங் மனிதன்.

- இரா.கவியரசு

Pin It